டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த திமுத்!

3316

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஷ் கிண்ண தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஷ் கிண்ண தொடர் ஆரம்பமாகியதிலிருந்து இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணிக்கு துடுப்பாட்டத்தில் தூணாக நின்று முதல் டெஸ்டில் இரண்டு சதங்கள், இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்கள் என அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தற்போது 913 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர்

ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பது…

இதன் மூலம் முதலிடத்தில் காணப்படும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் இடத்தை பிடிப்பதற்கு ஸ்மித்திற்கு இன்னும் 9 தரவரிசை புள்ளிகள் மாத்திரமே காணப்படுகின்றது. இதேவேளை இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் போது தலையில் பந்து தாக்கிய காரணத்தினால் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு நான்காவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார். பொறுப்புணர்ச்சியான ஆட்டத்துடன் நிலைத்து நின்று 122 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதுவென்ற திமுத் கருணாரத்ன 4 நிலைகள் உயர்ந்து 716 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாவது நிலையை அடைந்துள்ளார். மேலும் இலங்கை அணிக்காக போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து ஆடிய அஞ்சலோ மெதிவ்ஸ் 3 நிலைகள் உயர்ந்து 674 தரவரிசை புள்ளிகளுடன் 14ஆவது நிலையை அடைந்துள்ளார்.

வெற்றி தோல்வியின்றி நிறைவுக்குவந்த இரண்டாவது ஆஷஷ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக ஆட்டமிழக்காது சதமடித்து ஆட்டநாயகன் விருதுவென்ற பென் ஸ்டோக்ஸ் 6 நிலைகள் உயர்ந்து 625 தரவரிசை புள்ளிகளுடன் 26ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும், அதே போட்டியில் அரைச்சதம் கடந்த விக்கெட் காப்பாளர் ஜொனி பெயர்ஸ்டோ 7 நிலைகள் முன்னேறி 30ஆவது நிலையை அடைந்துள்ளார். 

நியூசிலாந்து டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சிறந்த  இணைப்பாட்டமென்றை ஏற்படுத்தி அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்களை பெற்ற நிரோஷன் டிக்வெல்ல வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (582) 5 நிலைகள் உயர்ந்து 33ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும் ஆஷஷ் முதல் டெஸ்டில் சதம், இரண்டாவது டெஸ்டில் அரைச்சதம் விளாசிய இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் 17 நிலைகள் உயர்ந்து 64ஆவது நிலையை அடைந்துள்ளார். 

ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து உபாதை காரணமாக…

குறித்த இரு தொடர்களின் நிறைவில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நான்கு அணி வீரர்களினாலும் முதல் பத்து இடங்களுக்குள் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆனால் முதலிடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் ஆஷஷ் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் தற்போது வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (914) முதலிடத்தை மேலும் உறுதி செய்துள்ளார். 

இதேவேளை ஐந்தாமிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் நைல் வேக்னர் குழாமில் இடம்பெற்று இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாததன் காரணமாக ஆறாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டு, ஆறாமிடத்திலிருந்த ரவீந்திர ஜடோஜா ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவை இரண்டுமே முதல் 10 நிலைகளுக்குள் இடம்பெற்ற மாற்றங்களாகும்.

ஆஷஷ் கிண்ண தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஒரு ஐந்து விக்கெட்டுடன் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஸ்டுவர்ட் ப்ரோட் 721 தரவரிசை புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 14ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும் தொடரில் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ரிஸ் வோக்ஸ் 2 நிலைகள் உயர்ந்து 27ஆவது இடத்தை அடைந்துள்ளார். 

நியூசிலாந்து டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களுடன் போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய 9 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (479) 36ஆவது நிலையை அடைந்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜெக் லீச்சும் 8 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (422) 40ஆவது நிலையை அடைந்துள்ளார்.

ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று…

மேலும் தொடரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல், 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கையின் லசித் எம்புல்தெனிய, 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கையின் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் தனஞ்சய டி சில்வா, கன்னி டெஸ்டில் விளையாடி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முன்னேறியுள்ளனர். 

டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆஷஷ் தொடரில் அசத்திய அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் முதல் முறையாக முதல் ஐந்து இடங்களுக்குள் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் நுழைந்துள்ளார். துடுப்பாட்டத்தில் 52 ஓட்டங்கள், பந்துவீச்சில் 13 விக்கெட்டுக்கள் என வீழ்த்தி இவ்வாறு 339 தரவரிசை புள்ளிகளுடன் ஒரு நிலை முன்னேறி 5ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இதன் காரணமாக ஐந்தாமிடத்திலிருந்த தென்னாபிரிக்க வீரர் வெர்னன் பிளான்டர் ஆறாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். டெஸ்ட் சகலதுறை வீரர்களின் முதலிடத்தில் 439 தரவரிசை புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜெசன் ஹோல்டர் காணப்படுகின்றார். மேலும் துடுப்பாட்டத்தில் சிறந்த இணைப்பட்டத்தை வழங்கிய சுரங்க லக்மால் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் 25ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<