“எமது துடுப்பாட்ட வீரர்களால் ஓட்டங்களை குவிக்க முடியும்” – திமுத் நம்பிக்கை

615

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இன்று (13) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் ஓட்டங்களை குவிக்க முடியும் என புதிய அணித் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்போம்” – கேஷவ் மஹாராஜ்

இலங்கை அணிக்கு எதிராக நாளை (13) ஆரம்பமாகவுள்ள..

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி தொடருக்கான குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் இல்லாமல், புதிய வீரர்கள் கொண்ட குழாமுடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

இந்த நிலையில், புதிய துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் புதிய அணியுடன் களமிறங்கும் இலங்கை அணியால், அனுபவ வீரர்கள் இல்லாவிடினும் ஓட்டங்களை குவிக்க முடியும் என திமுத் கருணாரத்ன நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றைய போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன,

“எங்களில் சில வீரர்கள் தென்னாபிரிக்க சூழ்நிலையில் விளையாடியுள்ளோம். அதனால் இந்த டெஸ்ட் தொடரில் எம்மால் ஓட்டங்களை குவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். புதுமுக வீரர்கள் சிலரும் அணியில் இணைந்துள்ளனர். அதுவும் எமக்கு சிறந்த விடயமாகவே அமைந்துள்ளது.

குறித்த புதுமுக வீரர்கள் இலங்கையில் நடைபெற்ற முதற்தர போட்டி தொடரின் இந்த பருவகாலத்தில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளனர். அவர்கள் எப்படி இந்த ஆடுகளங்களில் விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அணித் தலைவர் என்ற ரீதியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இப்போது நான் செய்யவேண்டியது, ஏற்கனவே நாம் இந்த ஆடுகளங்களில் எப்படி துடுப்பெடுத்தாடினோம் என்பதை புதுக வீரர்களுக்கு சொல்வதும், சில ஆலோசனைகளை வழங்குவதும் தான்.

நான் மற்றும் சில வீரர்கள் இந்த ஆடுகளங்களில் ஏற்கனவே விளையாடியுள்ளோம். குறித்த வீரர்களால், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க முடியும். புதிய வீரர்களுக்கு தென்னாபிரிக்க ஆடுகளங்களின் சூழ்நிலைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். அணியென்ற ரீதியில் வீரர்கள் அனைவரும் இணைந்து குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும்.

நாங்கள் முன்னேறியே வந்திருக்கின்றோம்: சந்திக ஹதுருசிங்க

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள..

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. குறிப்பாக விளையாட்டுதுறை அமைச்சில் மாற்றம், கிரிக்கெட் சபையில் மாற்றம், ஐசிசியின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு, தேர்வுக்குழு மாற்றம் என பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதுபோன்ற வெளியில் நடக்கும் விடயங்கள் கிரிக்கெட் அணிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதையும் திமுத் கருணாரத்ன தெளிவுப்படுத்தியுள்ளார்.

“இவ்வாறு விடயங்களை வெளியில் வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவது இலகுவான விடயம் அல்ல. ஆனால், அணியென்ற ரீதியில் போட்டியில் மாத்திரம் கவனத்தை செலுத்த வேண்டும் என நினைக்கிறோம். வீரர்களை தெரிவுசெய்யும் பணியை தெரிவுக்குழு செய்துவருகின்றது. நாம், தென்னாபிரிக்க அணியுடன் போட்டித் தன்மையுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மாத்திரமே கவனத்தை செலுத்தி வருகின்றோம்” என்றார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 01.30 மணிக்கு (இலங்கை நேரம்) டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது..

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<