டெஸ்ட் தரவரிசை: டேவிட் வோர்னரை பின்தள்ளிய திமுத்

792

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசையை உலக கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று (12) அறிவித்தது.

அதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஒரு இடம் முன்னேறி, 754 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி இனால் வெளியிடப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் 924 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் ஸ்மித் 67 மற்றும் 23 ஓட்டங்களை எடுத்தார், கேன் வில்லியம்சன் தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.

இதனிடையே, தென்னாபிரிக்க அணித்தலைவர் டீன் எல்கர் ஜொஹனஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 96 ஓட்டங்கள் எடுத்ததைத் தொடர்ந்து நான்கு இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரை பின்தள்ளி, இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை, ஐசிசி இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இந்திய நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி முறையே 5 ஆவது மற்றும் 9 ஆவது இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் தரவரிசையில் 26 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் கவாஜா 137 மற்றும் 101 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சாளர்களில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 8 இடங்கள் முன்னேறி, ஐசிசி இன் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷூக்கு எதிரான கிரைஸ்ட்சேர்ச் டெஸ்ட்டில் ஜேமிசன் 114 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிரான வொண்டரர்ஸ் டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பின்தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<