இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணியின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தான் பங்குகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை இலங்கை கிரிக்கட் தலைமை நிர்வாக அதிகாரியான அஷ்லே டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை இலங்கை அணிக்காக 327 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்ஷான் 39.44 என்ற துடுப்பாட்ட சராசரியில் 10,216 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் அவரது ஆகக் கூடுதலான ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 161 ஓட்டங்களாகும். அத்தோடு டில்ஷான் தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையில் 22 சதங்கள் மற்றும் 47 அரைச் சதங்களை அடித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் ஜூன் மாதம் 13ஆம் திகதி நிறைவுபெறுகிறது. அதன் பின் இலங்கை அணி அயர்லாந்து அணியோடு 2 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இங்கிலாந்து அணியோடு 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது.
அயர்லாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஜூன் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்