இந்திய அணிக்கு எதிராக இன்று (12) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்ஷான் மதுசங்கவின் வலது தோற்பட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை இதுவரை குணமடையாத காரணத்தால் அவரால் இன்றைய தினம் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>> இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கிறதா? – கிரிஸ் சில்வர்வூட்!
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது டில்ஷான் மதுசங்கவின் வலது தோற்பட்டை பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் 6 ஓவர்களை வீசிய நிலையில் அவர் களத்திலிருந்து வெளியேறினார்.
குறித்த இந்த உபாதை காரணமாக அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த அறிக்கைகள் இலங்கை அணிக்கு கிடைத்த பின்னர் அவர் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (11) அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் அவர் இரண்டாவது போட்டிக்கான உடற்தகுதியுடன் இல்லாத காரணத்தால், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றைய தினம் (12) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<