மொரிஷியஸ் தீவுகளில் இம்மாதம் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண மொரிஷியஸ் T10 லீக் தொடரில் திலகரத்ன டில்ஷான், அஜன்த மெண்டிஸ், ஷாமர கபுகெதர உள்ளிட்ட 10 இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரிஷியஸ் தீவுகள் கிரிக்கெட் சபையினால் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மொரிஷியஸ் T10 லீக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்
19 லீக் ஆட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டித் தொடரானது அஞ்சலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொரிஷியஸ் தீபகற்பத்தில் நடைபெறுகின்ற பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், கனடா, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 78 நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அத்துடன், ஆறு அணிகள் பங்குபெறவுள்ள இந்தத் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான திலகரத்ன டில்ஷான், அஜன்த மெண்டிஸ், ஷாமர கபுகெதர உள்ளிட்ட 10 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரோஸ் ஹில் வொரியர்ஸ் அணியின் தலைவராக அஜன்த மெண்டிஸ் செயற்படவுள்ளதுடன், அந்த அணியில் சச்சித்ர சேனநாயக்க, சாலிய சமன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஷாமர கபுகெதர குட்லேண்ட் ரைடர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ளதுடன். மலிந்த புஷ்பகுமார, ரஜீவ வீரசிங்க உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்காக விளையாடவுள்ளனர்.
>> LPL தொடருடன் இணையும் முன்னணி கிரிக்கெட் வர்னணையாளர்கள்!
இதனிடையே, இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரத்ன டில்ஷான் மற்றும் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான டில்ஹார பெர்னாணடோ ஆகிய இருவரும் செயின்ட் பீரி குவக்கர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.
மேலும், இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய சுழல் பந்துவீச்சாளரான மாலிங்க பண்டார பம்போஸ் ரப்டோர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இலங்கை அணியின் மற்றொரு முன்னாள் வீரரான ஷாமர சில்வா மஹிபேர்க் ஸ்டோம்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹேர்ஷல் கிப்ஸ், இந்தியாவின் முனாப் பட்டேல், பாகிஸ்தானின் டினெஷ் கனேரியா உள்ளிட்ட வீரர்களும் மொரிஷியஸ் T10 லீக் தொடரில் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<