கடந்த 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி, இரண்டு வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் நடைபெற்ற 2009 T20 உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வியுறாத ஒரே அணியாக இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தது.
இதில் பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, 8 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவி சம்பியனாகும் வாய்ப்பை கோட்டைவிட்டது.
எவ்வாறாயினும், இந்தத் தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் மிரட்டிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான திலகரட்ன டில்ஷான், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான நடுவர் குழாம் அறிவிப்பு
அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் தனக்கே உரித்தான டில்ஸ் கூப் என்ற புதிய துடுப்பாட்ட பிரயோகத்தையும் T20 போட்டிகளில் அறிமுகப்படுத்தினார்.
எனவே, 2009 T20 உலகக் கிண்ணத்தில் திலகரட்ன டில்ஷான் விளையாடிய போட்டிகளையும், அதில் அவர் வெளிப்படுத்திய திறமைகளையும் தொகுப்பாக இங்கு பார்ப்போம்.
முதல் போட்டி – (அவுஸ்திரேலியா)
அப்போதைய நாட்களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் கிரிக்கெட் உலகின் பலமிக்க அணிகளாகவும், ஐசிசியின் முக்கிய தொடர்களில் இறுதிப் போட்டி வரை வந்து மோதிய அணிகளாகவும் விளங்கின.
2009 T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சி குழுவில் இடம்பிடித்திருந்தது. இதில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றன.
இந்த நிலையில், திலகரட்ன டில்ஷான் முதல் தடவையாக T20 உலகக் கிண்ணதில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக களமிறங்கினார்.
நொட்டிங்ஹம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்தது. இதில் டில்ஷான், டேவிட் வோர்னரின் பிடியெடுப்பு ஒன்றையும் எடுத்தார்.
160 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதில் இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய டில்ஷான், 32 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்று மைதானத்தை அமர்க்களப்படுத்தினார்.
அணித்தலைவர் குமார் சங்கக்காரவுடன் இரண்டாவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டமொன்றை (69 ஓட்டங்கள்) மேற்கொண்ட டில்ஷான், 28 பந்துகளில் அரைச் சதமடித்தார். அதுவும் யாரும் எதிர்பார்த்திராக வித்தியாசமான ஒரு துடுப்பாட்ட பாணியில் பௌண்டரிக்கு பந்தை அடித்து தன்னுடைய அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
பார்வையாள்கள் மாத்திரமல்ல. போட்டி நடுவர் மற்றும் எதிரணியின் களத்தடுப்பாளர்களையும் பிரம்மிப்புக்கு உள்ளாக்கி ஷேன் வொட்சனின் பந்தை அவர் இவ்வாறு பௌண்டரிக்கு அடித்தார்.
இதன்போது போட்டியின் நேரடி வர்னணையில் இருந்தவர் டில்ஷானின் துடுப்பாட்ட பிரயோகம் தொடர்பில் இவ்வாறதொரு கருத்தை வெளியிட்டார்.
”அவரது துடுப்பாட்ட பிரயோகம் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் 50 ஓட்டங்களைப் பெற அது சிறந்த துடுப்பாட்ட பிரயோகமாக அமைந்தது. துடுப்பு மட்டையை நோக்கி நேராக வந்த பந்தை விக்கெட் காப்பாளரின் தலைக்கு மேலாக அடித்தார். இது உண்மையில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட பிரயோகம்” என குறிப்பிட்டார்.
இதனையடுத்து கிரிக்கெட் அரங்கில் DilsCoop என்ற புதிய துடுப்பாட்ட பிரயோகம் அறிமுகமானது. இந்த புதுிய துடுப்பாட்ட முறைமையை அறிமுகப்படுத்திய பெருமை டில்ஷானையே சாரும்.
இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
எனினும், போட்டியின் ஆட்டநாயகனாக 55 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குமார் சங்கக்கார தெரிவாகினார்.
இரண்டாவது போட்டி (மேற்கிந்திய தீவுகள்)
முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திலகரட்ன டில்ஷான் மற்றும் சனத் ஜயசூரியவின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய டில்ஷான், 47 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதுமாத்திரமின்றி, சனத் ஜயசூரியவுடன் முதல் விக்கெட்டுக்காக சாதனைமிகு 124 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தார்.
முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகள்! ; மெதிவ்ஸின் அசத்தல் பந்துவீச்சு
எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இலங்கை அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தோல்வியுறாத அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது டில்ஷானுடன் இணைந்து துடுப்பாட்டத்தில் அசத்தி 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது போட்டி (பாகிஸ்தான்)
முதல் சுற்றில் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகிய இலங்கை அணி, சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான், 38 பந்துகளில் 8 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 46 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 19 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆட்டநாயகன் விருதை திலகரட்ன டில்ஷான் பெற்றுக்கொண்டார்.
நான்காவது போட்டி (அயர்லாந்து)
சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணியை இலங்கை சந்தித்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
கடந்த மூன்று போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திலகரட்ன டில்ஷானுக்கு இந்தப் போட்டியில் பிரகாசிக்க முடியாமல் போனது. அவர் முகங்கொடுத்த இரண்டாவது பந்தில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.
எவ்வாறாயினும், மஹேல ஜயவர்தனவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுபெடுத்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது மஹேல ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டது.
ஐந்தாவது போட்டி (நியூசிலாந்து)
சுப்பர் 8 சுற்றில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இலங்கை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது. அயர்லாந்து அணியுடனான போட்டியில் டக்அவுட் ஆன டில்ஷான், இந்தப் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 5 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார்.
அதேபோல, மஹேல ஜயவர்தன 41 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 35 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இலங்கை வீரர்களின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதேவேளை, இந்தப் போட்டியில் திலகரட்ன டில்ஷான் முதல் தடவையாகப் பந்துவீசியதுடன், அதில் ஒரு ஓவரை வீசிய அவர் 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
அரையிறுதிப் போட்டி (மேற்கிந்திய தீவுகள்)
சுப்பர் 8 சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரபல மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது.
பந்துவீச்சாளர்களால் 2014இல் உலக சாதனை படைத்த இலங்கை
லீக் சுற்றைப் போல இந்தப் போட்டியிலும் நாயண சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு திலகரட்ன டில்ஷான் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்து ஓட்டங்களைக் குவித்தார்.
மேற்கிந்ததிய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த அவர், 57 பந்துகளில் 2 சிக்ஸ்ரகள் மற்றும் 12 பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களை எடுத்து அமர்க்களப்படுத்தினார்.
இறுதியில் இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்தது.
எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்ளை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதனால் 57 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி, முதல் தடவையாக ஐசிசியின் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், லீக் சுற்று, சுப்பர் 8 சுற்று என இலங்கை அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி தோல்வியுறாத ஒரே அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
அதேபோல, துடுப்பாட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய திலகரட்ன டில்ஷான், போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இறுதிப் போட்டி (பாகிஸ்தான்)
சுப்பர் 8 சுற்றில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியை மீண்டும் இறுதிப் போட்டியில் இலங்கை அணி எதிர்கொண்டது. T20 உலகக் கிண்ணத்தைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடியது.
2012 T20 உலகக் கிண்ணத்தில் களைக்கட்டிய அஜந்த மெண்டிஸின் மாய சுழல்!
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், போட்டியின் முதல் ஓவரிலேயே இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இலங்கை அணியின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பாக அமைந்த திலகரட்ன டில்ஷான், மொஹமட் ஆமிர் வீசிய முதல் ஓவரின் 5ஆவது பந்தில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
எனினும், இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்காவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி முதல் தடவையாக T20 உலகக் கிண்ண சம்பியனாக, இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அதேபோல, இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை சஹீட் அப்ரிடியும், தொடர் நாயகன் விருதை இலங்கையின் திலகரட்ன டில்ஷானும் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய டில்ஷான், 3 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 316 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதுமாத்திரமின்றி. 2 தடவைகள் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<