சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த டில்ருவன் பெரேரா

358

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர்களில் ஒருவரான டில்ருவன் பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு, மின்னஞ்சல் மூலம் தனது ஓய்வு முடிவை தெரிவித்துள்ளதாக எமது இணையத்தளத்திற்கு அறியமுடிகிறது.

39 வயதான டில்ருவன் பெரேரா, இலங்கைக்காக 43 டெஸ்ட், 13 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பந்துவீச்சாளராக வலம்வந்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

>>அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்த நிலையில், டில்ருவன் பெரேரா இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,

நான் இன்னும் சிறிது காலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன். ஆனால், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுப்பது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

விளையாட்டில் சில சிறந்த வீரர்களுடன் விளையாடும் பாக்கியமும் மரியாதையும் எனக்கு கிடைத்துள்ளது. அருமையான நினைவுகளுடனும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும் நான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறேன்‘ என்று தில்ருவான் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் நாட்டிற்கு ஆற்றிய சேவையைத் தவிர, உள்ளூர் கிரிக்கெட் அரங்கிலும் டில்ருவன் பெரேரா பல மகத்தான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் 200இற்கும் மேற்பட்ட முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 808 முதல்தர விக்கெட்டுகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, இலங்கைக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஐந்தாவது இடத்தில் டில்ருவன் பெரேரா உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<