டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை ராணுவப்படை அணிகள் மோதின. இப்போட்டியில் இராணுவப்படை அணி வீரர் திலான் உதயங்க நடுவருக்கு தகாத வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தியதன் விளைவாக, அவருக்கு ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டியின் 67ஆவது நிமிடத்தில் திலான் உதயங்கவை விமானப்படை வீரர் துமிந்த முறையற்ற விதத்தில் தடுத்ததால் இராணுவப்படை அணிக்கு இலவச உதை பெறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது உதயங்க, தவறு நடைப்பெற்ற இடத்திற்கு முன்னாள் வைத்து பந்தை உதைக்க முயன்றார். இதைக் கண்ட போட்டியின் நடுவர் புத்திக டயஸ் பந்தை பின்னால் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இரண்டாவது முறையாகவும் உதயங்க பந்தை சரியான இடத்தில் வைக்க தவறியதால் நடுவர் மீண்டும் ஒரு முறை உதயங்கவை எச்சரித்தார், அதன்போது, நடுவரை நோக்கி தகாத வார்த்தைகளை உதயங்க உபயோகிக்க, நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார். இது அப்போட்டியில் உதயங்காவிற்கு காண்பிக்கப்பட்ட இரண்டாவது மஞ்சள் அட்டை என்பதனால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்போட்டியில் விமானப்படை அணி முன்னிலை பெற்றிருந்தாலும் இறுதி நிமிடத்தில் மதுஷான் டி சில்வா கோல் அடித்தமையினால் இராணுவப்படை அணி போட்டியை சமநிலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த 2016 ஆண்டுக்கான எப்.ஏ.கிண்ண கால்பந்தாட்ட சுற்றின் இறுதிப் போட்டியில் இடம்பெற்றது. அதன்போது, ரினௌன் அணியின் வீரர் பிரான்சிஸ் அக்பெட்டி இதே போன்று தகாத வார்த்தைப் பிரயோகம் பாவித்தமையினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஒழுக்காற்று குழு மற்றும் சீர்நடத்தை ஆணை குழு இவருக்கு 1 வருடம் போட்டி தடை விதித்தது.
ஒழுக்காற்று குழு மற்றும் சீர்நடத்தை ஆணைக்குழு, இத்தகைய தவறுகளுக்கு தண்டனை வழங்குவதில் கண்டிப்பாக இருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் அவர்களுக்கு விதிக்கப்படும் தடைக் காலம் குறித்து சில கேள்விகள் இருக்கின்றன.
இந்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ThePapare.com இது தொடர்பான அறிய ஒழுக்காற்று குழு மற்றும் சீர்நடத்தை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போதும், அதன் தரப்பில் இருந்து எந்த கருத்தும் கிடைக்கவில்லை.
வீரர்களுக்கு இவ்வாறான ஒழுக்காற்று தண்டனைகள் வழங்கப்படுவது குறித்து உங்களுடைய கருத்துகளை கீழே பதிவிடுங்கள்