இலங்கை அணியானது தற்போது புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான தனுஷ்க குணத்திலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் தமது கன்னி ஒருநாள் சதங்கள் மூலம், ஹம்பாந்தோட்டையில் தமது தாய் மண்ணை 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெறச் செய்திருந்தனர்.
கடந்த காலத்தினை எடுத்து நோக்கும்போது சனத் ஜயசூரிய, திலகரத்ன தில்ஷான் மற்றும் உப்புல் தரங்க ஆகிய முன்வரிசை வீரர்கள் மூலம் பெறப்பட்ட சதங்களால் இலங்கை அணியானது பல சாதனை வெற்றிகளை சுவீகரித்திருந்தது.
ஹமில்டன் மசகட்சாவின் அதிரடிக்கு பதில் கொடுத்த திக்வெல்ல மற்றும் குணதிலக்க
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை..
இதன் காரணமாக, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு இன்னும் இரண்டு வருடங்களை விடக் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில், இலங்கை அணி தமக்கு பொருத்தமான இரண்டு இளம் ஆரம்ப வீரர்களைக் கண்டெடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெறப்பட்ட 229 ஓட்டங்கள் என்கிற அசுர இணைப்பாட்டம் பற்றி, அப்போட்டியின் ஆட்ட நாயகன் தனுஷ்க குணத்திலக்க கருத்து தெரிவிக்கையில்,
“நான் எதிரணி பந்து வீச்சினை தடுத்தாடும் விதத்திலான ஆட்டத்தினையே முதலில் ஆரம்பித்திருந்தேன். எனினும், திக்வெல்ல விரைவாக ஓட்டங்களை சேர்க்க தொடங்கியிருந்தார். இதனால், நாங்கள் இருவரும் எங்களது துடுப்பாட்ட பாணியினை மாற்றியிருந்தோம். அவர் எனக்கு பந்தினை ஸ்ட்ரைக்கர் முனையில் நின்று எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தினை அடிக்கடி ஏற்படுத்தித் தந்தார். எனவே, நான் எனக்கு கிடைத்த வாய்ப்புக்களில் முடியுமான அளவு சிரமம் பாராது விரைவாக ஓட்டங்களை சேர்த்தேன். “
“எங்களது துடுப்பாட்ட வரிசை மிகவும் பலமானதாக காணப்பட்டிருந்ததால், நாங்கள் இறுதி இலக்கு பற்றி அவ்வளவாக கருத்திற்கொண்டிருக்கவில்லை. முதல் 20 ஓவர்களிற்கு எங்களது இயற்கையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணிக்கு ஒரு நல்ல நிலையினை பெற்றுக்கொடுத்தால், அதன் பிறகான போட்டியின் போக்கு பற்றி எங்களுக்கு தீர்மானிக்க முடியும். “ என தெரிவித்திருந்தார்.
மைதானத்தில் வீரர்களாக அறியப்பட்ட இந்த இருவரும், அதற்கு வெளியில் நல்ல நண்பர்களாக காணப்படுகின்றனர். இதற்கு இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஒன்றாக இணைந்து காணப்படுவது சான்றாக அமைகின்றது.
“நான் சிறுவனாக இருந்த போது, எனக்கிருந்த நான்கு சிறந்த நண்பர்களில் திக்வெல்லவும் ஒருவராக காணப்பட்டார். நாங்கள் இருவரும் போட்டிகளில் விளையாடாத போதும் நல்ல நண்பர்களாக இருப்போம். இதனால், அவருடன் இணைந்து துடுப்பாடுவது எனக்கு மிகவும் இலகுவாக காணப்படும். அதோடு, நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் கன்னிச் சதங்கள் பெற்றதையிட்டு சந்தோசமடைகின்றேன். திக்வெல்லவின் அபார சதமே அனைத்திற்கும் காரணம், அது அவரது சிறப்பான ஆட்டமாகவும் காணப்படுகின்றது. “
என்று மூன்றாவது ஒரு நாள் போட்டியின் பின்னர் குணத்திலக்க கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கை வீரர்கள் அனைவருக்கும் அபராதம்
ஹம்பந்தோட்டையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ஒரு நாள்..
இந்தப் போட்டிக்கு முன்னதாக, இரண்டு வீரர்களும் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்தியது மிகவும் குறைவு. அதோடு, இதற்கு முன்னராக அவர்கள் ஒரு நாள் போட்டிகளில் சதத்தினையும் பெற்றிருக்கவில்லை. இரண்டு வீரர்களும் மொத்தமாக 58 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 12 அரைச் சதங்களை மாத்திரமே இணைப்பாக பெற்றுள்ளனர்.
“நாங்கள் எப்போதும் சிறந்த ஆரம்பத்தினையே வெளிக்காட்டுவோம். எனினும், எம்மால் அதனை ஒரு நீண்ட இன்னிங்சாக மாற்றுவது கடினமாக இருக்கும். எனவே, எமது அண்மைய ஆட்டங்கள் பற்றி கலந்துரையாடியிருந்தோம். எம் இருவருக்கும், இந்த கன்னிச் சதமானது மிகவும் தேவையாக காணப்பட்டிருந்தது. இந்த சதம் மூலம், நான் சர்வதேச போட்டிகளில் சதமொன்றினை பெற எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை அறிந்து கொண்டேன். இனிவரும் காலங்களில் கிடைக்கும் வாய்ப்புக்கள் மூலம் சதங்களின் எண்ணிக்கையை கூட்டுவோம்.“
என தனுஷ்க குணத்திலக்க ஒரு நாள் போட்டிகளில் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றினை விளையாடுவதன் முக்கியத்துவத்தினை குறிப்பிட்டிருந்தார்.
திக்வெல்ல அதிகமாக விக்கெட்டிற்கு பின்னால் பந்துகளை அடித்தே ஓட்டங்களை சேர்க்கும் வீரராக காணப்படுகின்றார். எனினும், குணத்திலக்க அதற்கு மாற்றமாக பந்தினை லெக் திசைகளில் நேர்த்தியாக அடித்து ஓட்டங்களை பெறுகின்றார்.
இந்நிலையில் தனது அணியின் இளம் ஆரம்ப ஜோடி பற்றி கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ்,
>> இப்போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட
“இவர்கள் இருவரும் துடுப்பாடிய விதத்தினை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதோடு, இருவரும் 50 மற்றும் 60 ஓட்டங்களோடு தமது ஆட்டத்தினை முடித்துக்கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கும் போது அது மேலும் சந்தோசமளிக்கின்றது. எமது அணிக்கு எது தற்போது தேவையாக இருக்கின்றதோ அதனை இரண்டு வீரர்களும் வழங்கியிருந்தனர். துரதிஷ்டவசமாக அவர்களால் போட்டியை முழுமையாக முடிக்க இயலவில்லை. எனினும், அணிக்காக அவர்கள் சிறப்பான பங்களிப்பு ஒன்றினை செய்து முடித்திருக்கின்றனர். நிரோஷனை நோக்கும் போது, அவர் யாருக்கும் அஞ்சாத ஒரு கிரிக்கெட் வீரராக காணப்படுகின்றார். எல்லாப் பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ளும் அவரது ஆற்றல், சிறப்பானது. “ எனத் தெரிவித்தார்.