இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த பதினான்கு மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இலங்கைக்கு எதிராக வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இதே உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.
Zoom இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடர் முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் எமது அணி பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தை இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் நிரூபிக்க எதிர்பார்த்துள்ளோம்.
>> இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட்: தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் விபரம்
கடந்த காலங்களை எடுத்துக் கொண்டால் எமது அணி டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளது. குறிப்பாக, எமது வியூகங்களும், திட்டங்களும் எமது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, அதே திட்டங்களுடன் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கினால் எம்மால் வெற்றிபெற முடியும் என எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரானது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிவித்த அவர், இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வெல்வதென்பது மிகப் பெரிய சவால் என குறிப்பிட்டார்.
“உண்மையில் இலங்கை அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும் என்பதை நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அதற்கான அனைத்து கௌரவங்களும் இலங்கை அணியைத் தான் சாரும். குறிப்பாக சொந்த மண்ணில் இலங்கை அணியை டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்துவதென்பது இலகுவான விடயமல்ல.
>> இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்குவாரா Akila Dhananjaya?
எனினும், நாங்கள் இதற்காக மேலதிகமாக முயற்சிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதற்கான நாங்கள் பயிற்சிகளை எடுத்து வருகின்றோம். உண்மையில் எமது திட்டங்கள் சரிவர நிறைவேறினால் இந்தத் தொடரை எம்மால் வெற்றிகொள்ள முடியும்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் மொயின் அலி விளையாடமாட்டார் என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியினர் ஜனவரி 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தபோது நடத்தப்பட்ட PCR பரிசோதனையின்போது 33 வயதான மொயின் அலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
>> உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி
அதேபோல, மொயின் அலியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என கருதப்பட்ட கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது அவர் தனிமையிலிருந்து விடுபட்டுள்ளார். ஆனால், முதலாவது டெஸ்ட் போட்டியில் வோக்ஸ் விளையாடுவது கடினமான விடயம் என சில்வர்வூட் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் டேன் லோரன்ஸ் அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வார் என அணியின் பயிற்சியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸெக்ஸ் கழகத்துக்காக விளையாடி வரும் வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒலி பொப்புக்குப் பதிலாக ஐந்தாம் இலக்கத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதியாக, 2018இல் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி, 3க்கு 0 என இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<