அஷானின் அரைச்சதம் வீண்: அரை இறுதி வாய்ப்பை இழந்தது தம்புள்ளை

National Super League Four Day Tournament 2022

209

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணம் – தம்புள்ளை அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (27) நிறைவுக்கு வந்தது.

லசித் அபேரட்ன, துஷான் ஹேமந்த மற்றும் அஷான் பிரியன்ஞனின் அரைச்சதங்கள், மாலிந்த புஷ்பகுமாரவின் 6 விக்கெட்டுகள் மற்றும் விஷ்வ பெர்னாண்டோவின் 4 விக்கெட்டுகள் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த தம்புள்ளை அணி, யாழ்ப்பாணம் அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

கடந்த 24 ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் லசித் அபேரட்ன (68), துஷான் ஹேமந்த (63) மற்றும் மினோத் பானுக (53) ஆகிய மூவரும் அரைச்சதம் அடிக்க, யாழ்ப்பாண அணிக்காக பந்துவீச்சில் நுவன் பிரதீப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களைக் குவித்தது. யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க (69), ஜனித் லியனகே (69) மற்றும் சமிந்த பெர்னாண்டோ (52) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்க்க, தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் மாலிந்த புஷ்பகுமார ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து 96 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ளை அணி, அஷான் பிரியன்ஞனின் அரைச்சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்படி, 161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற யாழ்ப்பாண அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இதேவேனை, தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைய, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை கொழும்பு அணியும், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை முறையே கண்டி, காலி அணிகள் பெற்றுக்கொண்டன.

இந்தப் போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேகலயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 283 (99.5) – லசித் அபேரட்ன 68, துஷான் ஹேமந்த 63*, மினோத் பானுக 53, நுவன் பிரதீப் 7/52

யாழ்ப்பாண அணி – 379 (122.1) – நிஷான் மதுஷ்க 69, ஜனித் லியனகே 69, சமிந்த பெர்னாண்டோ 52, அவிஷ்க தரிந்து 40, திலும் சுதீர 32, விஷ்வ பெர்னாண்டோ 4/66, மாலிந்த புஷ்பகுமார 4/131

தம்புள்ளை அணி – 256/9d (59) – அஷான் பிரியன்ஞன் 62, மினோத் பானுக 48, லியோ பிராஸ்சிஸ்கோ 46, தனன்ஞய டி சில்வா 3/44, ஜனித் லியனகே 2/26, ஜெப்ரி வெண்டர்சே 2/63

யாழ்ப்பாண அணி – 61/2 (18) – நிஷான் மதுஷ்க 32*, தனன்ஞய டி சில்வா 23*, மாலிந்த புஷ்பகுமார 2/20

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<