யாழ்ப்பாண அணிக்காக ஹெட்ரிக் அரைச்சதமடித்த ஜனித்

National Super League Four Day Tournament 2022

239

தம்புள்ளை அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் யாழ்ப்பாண அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 354 ஓட்டங்களைக் குவித்து, 71 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் கடைசி வாரத்துக்காக நடைபெறும் தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாண அணிகளுக்கு எடையிலான 10 ஆவது லீக் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (25) நிறைவுக்கு வந்தது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (24) ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 283 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாண அணி, நிஷான் மதுஷ்க (69), ஜனித் லியனகே (69) மற்றும் சமிந்த பெர்னாண்டோ (52) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் இன்றைய (26) மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் யாழ்ப்பாணம் அணிக்காக கடந்த சில போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற 26 வயதான ஜனித் லியனகே, இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் ஹெட்ரிக் அரைச்சதத்தைப் பதிவுசெய்தார்.

முன்னதாக நடைபெற்ற கண்டி அணிக்கு எதிரான போட்டியில் 85 ஓட்டங்களையும், காலி அணிக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட மாலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 283 (99.5) – லசித் அபேரட்ன 68, துஷான் ஹேமந்த 63, மினோத் பானுக 53, நுவன் பிரதீப் 7/52

யாழ்ப்பாண அணி – 354/7 (118) – நிஷான் மதுஷ்க 69, ஜனித் லியனகே 69, சமிந்த பெர்னாண்டோ 52, அவிஷ்க தரிந்து 40, திலும் சுதீர 31*, மாலிந்த புஷ்பகுமார 4/131

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<