நிமேஷவின் சதத்தால் தோல்வியை தவிர்த்த தம்புள்ளை அணி

National Super League Four Day Tournament 2022

266
National Super League Four Day Tournament

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் நேற்று (20) நிறைவுக்கு வந்தன.

இதில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் யாழ்ப்பாணம் அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த காலி அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

காலி அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிமேஷ குணசிங்க, இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் தொடர்ச்சியாக தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதேபோல, கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையிலான 7ஆவது லீக் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதில் தம்புள்ளை அணியின் மாலிந்த புஷ்பகுமார முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய மாலிந்த, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பிரபாத் ஜயசூரியவைப் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, நான்காவது வாரத்துக்காக நடைபெற்ற போட்டிகளின் முடிவில் கொழும்பு அணி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, கண்டி அணியை பின்தள்ளி காலி அணி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோல, கடைசி இடங்களை முறையே யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டுள்ளன.

யாழ்ப்பாணம் எதிர் காலி

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 7 விக்கெட்டுகளால் காலி அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 254 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 444 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 190 பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணம் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே 105 பந்துகளில் 7 பௌண்ட்ரிகள் மற்றும் சிக்ஸருடனட 72 ஓட்டங்களைப் பெற்று அந்த அணிக்கு வலுச்சேர்த்தார்.

காலி அணியின் பந்துவீச்சில் சானக ருவன்சிறி மற்றும் சுமந்த லக்ஷான் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

இதன்படி, 35 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் காலி அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் அணி – 254/10 (83.5) – நவோத் பரணவிதான 34, நிஷான் மதுஷ்க 29, சந்தூஷ் குணதிலக்க 29, சுமிந்த லக்ஷான் 4/28, டில்ஷான் மதுஷங்க 3/51, சலன டி சில்வா 2/72

காலி அணி – 444/9d – சங்கீத் குரே 160, பபசர வதுகே 108, சுமிந்த லக்ஷான் 57, ஹஷான் துமிந்து 54, சஷிக துல்ஷான் 4/146, ஜனித் லியனகே 3/53

யாழ்ப்பாணம் அணி – 224/10 (56.2) – ஜனித் லியனகே 72, நிஷான் மதுஷ்க 45, நவோத் பரணவிதான 36, சானக ருவன்சிறி 3/29, டில்ஷான் மதுஷங்க 3/49, சலன டி சில்வா 2/72

காலி அணி – 38/3 (7) – ஹஷான் துமிந்து 16, துனித் வெல்லாலகே 2/17

முடிவு – காலி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

கண்டி எதிர் தம்புள்ளை

நிமேஷ குணசிங்கவின் சதத்தின் மூலம் கண்டி அணிக்கெதிரான போட்டியை தம்புள்ளை அணி சமநிலையில் முடித்துக் கொண்டது.

பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 446 ஓட்டங்களைகப் பெற்றுக்கொள்ள, தம்புள்ளை அணி தமது முதல் இன்னிங்ஸில் 216 ஓட்டங்களுக்கு சுருண்டது.

230 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக விளையாடிய கண்டி அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்கiளைக் குவித்தது. கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் கமிந்து மெண்டிஸ் அதிகட்சமாக 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸைப் போல சுழல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மாலிந்த புஷ்பகுமார 108 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி, முதல் இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட 7 விக்கெட்டுகளுடன் இந்தப் போட்டியில் அவர் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே. 509 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ளை அணி, 213 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலையில் அடைந்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிமேஷ குணசிங்க ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை எடுத்தார்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கண்டி அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி 446/10 (128.5) – ஓஷத பெர்னாண்டோ 97, கமிந்து மெண்டிஸ் 94, லஹரு உதார 83, கமில் மிஷார 74, மாலிந்த புஷ்பகுமார 7/120

தம்புள்ளை அணி – 216/10 (60) – அஷான் பிரியன்ஞன் 73, மினோத் பானுக 71, லஹிரு சமரகோன் 42, அஷைன் டேனியல் 5/75, அசித்த பெர்னாண்டோ 4/39

கண்டி அணி – 278/9 (78.2) – கமிந்து மெண்டிஸ் 88, ஓஷத பெர்னாண்டோ 63, லஹிரு உதார 42, மாலிந்த புஷ்பகுமார 5/108

தம்புள்ளை அணி – 213/4 (55.3) – நிமேஷ குணசிங்க 102*, லியோ பிரேன்சிஸ்கோ 48, சஹன் ஆரச்சிகே 2/61

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<