இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் நேற்று (19) நிறைவுக்கு வந்தன.
இதில் காலி அணிக்காக சங்கீத் குரே, பபசர வடுகே ஆகிய இருவரும் சதம் குவித்து பிராகாசித்திருந்தனர்.
அதேபோன்று, சுமிந்த லக்ஷான் மற்றும் ஹஷான் துமிந்து ஆகியோர் காலி அணிக்காகவும், அஷான் பிரியன்ஞன் மற்றும் மினோத் பானுக தம்புள்ளை அணிக்காகவும், ஓஷத பெர்னாண்டோ கண்டி அணிக்காகவும் அரைச்சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தனர்.
இதனிடையே, தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் கண்டி வீரர் அஷைன் டேனியல் 5 விக்கெட்டுகள் குவியலைப் பதிவுசெய்தார்.
யாழ்ப்பாணம் எதிர் காலி
சங்கீத் குரே, பபசர வடுகே ஆகியோரது சதம் மற்றும் சுமிந்த லக்ஷான், ஹஷான் துமிந்துவின் அரைச்சதங்களின் உதவியுடன் யாழ்ப்பாண அணிக்கு எதிராக வலுவான ஓட்ட எண்ணிக்கையை காலி அணி பெற்றுக்கொண்டது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப்போட்டியின் மூன்றாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த காலி அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 444 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
காலி அணியின் துடுப்பாட்டத்தில் 58 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த சங்கீத் குரே சதம் கடந்து 160 ஓட்டங்களையும், 51 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த பபசர வடுகே 108 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்க்க, சுமிந்த லக்ஷான் 57 ஓட்டங்களையும், ஹஷான் துமிந்து 54 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதில் சங்கீத் குரே மற்றும் பபசர வடுகே ஆகிய இருவரும் முதல்தரப் போட்டிகளில் தங்களது 8ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தனர்.
யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் சஷிக துல்ஷான் 4 விக்கெட்டுகளையும், ஜனித் லியனகே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 190 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
யாழ்ப்பாண அணி – 254 (83.5) – நவோத் பரணவிதான 34, நிஷான் மதுஷ்க 29, சந்தூஷ் குணதிலக்க 28, சுமிந்த லக்ஷான் 4/28, டில்ஷான் மதுஷங்க 3/51, சலன டி சில்வா 2/72
காலி அணி – 444/9d (114.5) – சங்கீத் குரே 160, பபசர வடுகே 108, சுமிந்த லக்ஷான் 57, ஹஷான் துமிந்து 54, சஷிக துல்ஷான் 4/146, ஜனித் லியனகே 3/53
யாழ்ப்பாண அணி – 43/0 (12) – நவோத் பரணவிதான 22*, நிஷான் மதுஷ்க 21*
- சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி
- NSL தொடரில் ஹெட்ரிக் சதத்தை தவறவிட்ட ஓஷத
- தம்புள்ளை அணிக்காக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மாலிந்த
கண்டி எதிர் தம்புள்ளை
தம்புள்ளை அணிக்கெதிராக தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்களைக் குவித்தது.
கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த தம்புள்ளை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.
தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் அஷான் பிரியன்ஞன் 73 ஓட்டங்களையும், மினோத் பானுக 71 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் அஷைன் டேனியல் 5 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 230 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.
துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ 63 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 446 (128.5) – ஓஷத பெர்னாண்டோ 97, கமிந்து மெண்டிஸ் 94, லஹிரு உதார 83, கமில் மிஷார 74, மாலிந்த புஷ்பகுமார 7/120
தம்புள்ளை அணி – 216 (60) – அஷான் பிரியன்ஞன் 73, மினோத் பானுக 71, லஹிரு சமரகோன் 42, அஷைன் டேனியல் 5/75, அசித்த பெர்னாண்டோ 4/39
கண்டி அணி – 134/3 (34) – ஓஷத பெர்னாண்டோ 63, கமிந்து மெண்டிஸ் 36*
இந்த இரண்டு போட்டிகளினதும் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<