இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (13) நிறைவுக்கு வந்தன.
இதில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற பிரபல கண்டி அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேபோன்று, தம்புள்ளை மற்றும் காலி அணிகளுக்கிடையிலான 6ஆவது லீக் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இதன்படி, மூன்றாவது வாரத்துக்காக நடைபெற்ற போட்டிகளில் 5 சதங்களும், 7 அரைச்சதங்களும் குவிக்கப்பட்டன.
இதில் கொழும்பு அணியின் ஓஷத பெர்னாண்டோ, கண்டி அணியின் கமிந்து மெண்டிஸ், தம்புள்ளை அணியின் மினோத் பானுக, நிமேஷ குணசிங்க மற்றும் காலி அணிக்காக ஹஷான் துமிந்து மற்றும் தனன்ஞய லக்ஷான் ஆகிய வீரர்கள் சதம் அடித்து பிராகாசித்திருந்தனர்.
அதேபோன்று, கொழும்பு அணிக்காக லஹிரு மதுஷங்க, லக்ஷித மானசிங்க, நிபுன் தனன்ஞய, க்ரிஷான் சன்ஜுல மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகிய வீரர்களும், காலி அணிக்காக விஷாட் ரந்திக, தம்புள்ளை அணிக்காக பவந்த வீரசிங்க ஆகிய வீரர்களும் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.
இதனிடையே, கண்டி அணிக்கெதிரான போட்டியில் கசுன் ராஜித 5 விக்கெட்டுகள் குவியலைப் பதிவுசெய்தார்.
கொழும்பு எதிர் கண்டி
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களையும், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, 218 ஓட்டங்களையும் குவித்தது.
இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகக் களமிறங்கிய கண்டி அணி, அணித்தலைவர் கமிந்து மெண்டிஸின் அபார சதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து 259 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, நிபுன் தனன்ஞய, க்ரிஷான் சன்ஜுல மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட இளம் வீரர் நிபுன் தனன்ஞய, 96 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்படி, 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய கொழும்பு அணி, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 241 (71) – ஓஷத பெர்னாண்டோ 105, கசுன் விதுர 43, கமிந்து மெண்டிஸ் 26, பிரபாத் ஜயசூரிய 3/47, லக்ஷித மானசிங்க 3/59, கசுன் ராஜித 2/43, நிசல தாரக 2/51
கொழும்பு அணி – 218 (73.5) – லஹிரு மதுஷங்க 80, லக்ஷித மானசிங்க 53, அசித்த பெர்னாண்டோ 3/38, அஷைன் டேனியல் 3/51, சச்சிந்து கொலம்பகே 2/37
கண்டி அணி – 235 (71.2) – கமிந்து மெண்டிஸ் 114, சச்சிந்து கொலம்பகே 29, கசுன் ராஜித 5/48, லக்ஷித மானசிங்க 3/79
கொழும்பு அணி – 260/4 (74) – நிபுன் தனன்ஞய 96, க்ரிஷான் சன்ஜுல 55, நுவனிது பெர்னாண்டோ 60, சம்மு அஷான் 25, சச்சிந்து கொலம்பகே 2/52, அஷைன் டேனியல் 2/77
முடிவு – கொழும்பு அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
- NSL தொடரில் இரண்டாவது சதமடித்த ஓஷத பெர்னான்டோ
- கொழும்புக்கு பலம் சேர்த்த லக்ஷிதவின் சகலதுறை ஆட்டம்
- கமிந்து ஹெட்ரிக் சதமடிக்க; 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கசுன் ராஜித
தம்புள்ளை எதிர் காலி
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 418 ஓட்டங்களைக் குவித்தது.
அதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி, ஹஷான் துமிந்து, தனன்ஞய லக்ஷான் ஆகிய இருவரினதும் சதங்கள் மற்றும்
விஷாட் ரந்திகவின் அரைச்சதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களை எடுத்தது.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 4 விக்கெட்டுகளையும், அஷான் பிரியன்ஞன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 95 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ளை அணி, பவந்த வீரசிங்கவின் அரைச்சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
எனவே, 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலை அடைந்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை எடுத்தார்.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற காலி அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
தம்புள்ளை அணி – 418 (116.1) – மினோத் பானுக 163, நிமேஷ குணசிங்க 103, லஹிரு சமரகோன் 37*, சானக ருவன்சிறி 4/62, அகில தனன்ஞய 3/98
காலி அணி – 513 (141) – ஹஷான் துமிந்து 167, தனன்ஞய லக்ஷான் 119, விஷாட் ரந்திக 51, சுமிந்த லக்ஷான் 46, லஹிரு சமரகோன் 4/52, அஷான் பிரியன்ஞன் 3/84
தம்புள்ளை அணி – 300/7d (70) – பவந்த வீரசிங்க 76, மினோத் பானுக 49, சமிந்து விஜேசிங்க 40, சானக ருவன்சிறி 2/49, அகில தனன்ஞய 2/66
காலி அணி – 80/2 (20) – சங்கீத் குரே 47*, தனன்ஞய லக்ஷான் 15*
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<