இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் நேற்று (12) நிறைவுக்கு வந்தன.
இதில் கண்டி அணிக்காக தனியொருவராகப் போராடிய கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்த, காலி அணிக்காக ஹஷான் துமிந்து மற்றும் தனன்ஞய லக்ஷான் ஆகிய இருவரும் சதம் குவித்து பிராகாசித்திருந்தனர்.
கொழும்புக்கு பலம் சேர்த்த லக்ஷிதவின் சகலதுறை ஆட்டம்
அதேபோன்று, நிபுன் தனன்ஞய மற்றும் க்ரிஷான் சன்ஜுல ஆகியோர் கொழும்பு அணிக்காகவும், விஷாட் ரந்திக காலி அணிக்காகவும் அரைச்சதம் அடித்து நம்பிக்கை சேர்த்தனர்.
இதனிடையே, கண்டி அணிக்கு எதிரான போட்டியில் கசுன் ராஜித 5 விக்கெட்டுகள் குவியலைப் பதிவுசெய்தார்.
கண்டி எதிர் கொழும்பு
கண்டி அணிக்காக கமிந்து மெண்டிஸ் சதமடித்து கைகொடுத்தாலும், நிபுன் தனன்ஞய மற்றும் க்ரிஷான் சன்ஜுல ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களின் உதவியுடன் கொழும்பு அணி மற்றுமொரு வெற்றியை நெருங்கியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமது 2 ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த கண்டி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை. இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை எடுத்தது.
எனினும், அவ்வணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ், 166 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், லக்ஷித மானசிங்க 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 258 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிபுன் தனன்ஞய மற்றும் க்ரிஷான் சன்ஜுல ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களின் உதவியுடன் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது 29 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இளம் வீரர்களின் பிரகாசிப்பால் கொழும்பு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
எனவே போட்டியின் கடைசி நாளான இன்று (13) கொழும்பு அணியின் வெற்றிக்கு இன்னும் 145 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 241 (71) – ஓஷத பெர்னாண்டோ 105, கசுன் விதுர 43, கமிந்து மெண்டிஸ் 26, பிரபாத் ஜயசூரிய 3/47, லக்ஷித மானசிங்க 3/59, கசுன் ராஜித 2/43, நிசல தாரக 2/51
கொழும்பு அணி – 218 (73.5) – லஹிரு மதுஷங்க 80, லக்ஷித மானசிங்க 53, அசித்த பெர்னாண்டோ 3/38, அஷைன் டேனியல் 3/51, சச்சிந்து கொலம்பகே 2/37
கண்டி அணி – 235 (71.2) – கமிந்து மெண்டிஸ் 114, சச்சிந்து கொலம்பகே 29, கசுன் ராஜித 5/48, லக்ஷித மானசிங்க 3/79
கொழும்பு அணி – 114/0 (29) – நிபுன் தனன்ஞய 59, க்ரிஷான் சன்ஜுல 52
தம்புள்ளை எதிர் காலி
ஹஷான் துமிந்து, தனன்ஞய லக்ஷானின் சதம் மற்றும் விஷாட் ரந்திகவின் அரைச்சதத்தின் மூலம் தம்புள்ளை அணிக்கு எதிராக வலுவான ஓட்ட எண்ணிக்கையை காலி அணி பெற்றுக்கொண்டது.
தம்புள்ளையில் நடைபெறுகின்ற இந்தப்போட்டியின் மூன்றாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற காலி அணி, ஆட்ட நேர முடிவில் 499 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
காலி அணியின் துடுப்பாட்டத்தில் 59 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஹஷான் துமிந்து சதம் கடந்து 167 ஓட்டங்களையும், 93 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த அணித்தலைவர் தனன்ஞய
லக்ஷான் 119 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்க்க, விஷாட் ரந்திக 51 ஓட்டங்களையும் குவித்தார்.
இதில் ஹஷான் துமிந்து முதல்தரப் போட்டிகளில் 7 ஆவது சதத்தையும், தனன்ஞய லக்ஷான் முதல்தரப் போட்டிகளில் 2 ஆவது சதத்தையும் பெற்றுக்கொண்டனர்.
NSL தொடரில் இரண்டாவது சதமடித்த ஓஷத பெர்னான்டோ
இதனிடையே, காலி அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
தம்புள்ளை அணி – 418 (116.1) – மினோத் பானுக 163, நிமேஷ குணசிங்க 103, லஹிரு சமரகோன் 37*, சானக ருவன்சிறி 4/62, அகில தனன்ஞய 3/98
காலி அணி – 499/7 (141) – ஹஷான் துமிந்து 167, தனன்ஞய லக்ஷான் 119, விஷாட் ரன்திக 51, சுமிந்த லக்ஷான் 46, பபசர வடுகே 34, லஹிரு சமரகோன் 2/45, அஷான் பிரியஞ்சன் 2/82
இந்த இரண்டு போட்டிகளினதும் நான்காவது நாள் ஆட்டம் இன்று (13) தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<