கொழும்புக்கு பலம் சேர்த்த லக்ஷிதவின் சகலதுறை ஆட்டம்

National Super League Four Day Tournament 2022

261
minod, nimesha & laksitha- cover (1)

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (11) நிறைவுக்கு வந்தன.

இதில் கொழும்பு அணியின் லஹிரு மதுஷங்க மற்றும் லக்ஷித மானசிங்க, காலி அணியின் தனன்ஞய லக்ஷான் மற்றும் ஹஷான் துமிந்து ஆகிய வீரர்கள் அரைச்சதங்களைக் குவித்து பிரகாசித்திருந்தனர்.

அதேபோன்று, தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் இளம் வேகப் பந்துவீச்சாளரான சானக ருவன்சிறி 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.

இதனிடையே, கண்டி அணிக்கெதிரான போட்டியில் அரைச்சதம் அடித்து வலுச்சேர்த்த 22 வயதான இளம் வீரரான லக்ஷித மானசிங்க, முதல் இன்னிங்ஸைப் போல 2ஆவது இன்னிங்ஸிலும் கண்டி அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கண்டி எதிர் கொழும்பு

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கொழும்பு அணிக்கெதிரான 5ஆவது லீக் போட்டியில் கண்டி அணி 117 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நேற்று ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, லஹிரு மதுஷங்க (80) மற்றும் லக்ஷித மானசிங்க (53) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.

கண்டி அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, அஷைன் டேனியல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சச்சிந்து கொலம்பகே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ஓட்டங்களைக் குவித்து 117 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்களையும், சஹன் ஆரச்சிகே 5 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு அணிக்காக அரைச்சதம் அடித்து கைகொடுத்த 22 வயதான இளம் வீரரான லக்ஷித மானசிங்க பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 241 (71) – ஓஷத பெர்னாண்டோ 105, கசுன் விதுர 43, பிரபாத் ஜயசூரிய 3/47, லக்ஷித மானசிங்க 3/59, கசுன் ராஜித 2/43, நிசல தாரக 2/51

கொழும்பு அணி – 218 (73.5) – லஹிரு மதுஷங்க 80*, லக்ஷித மானசிங்க 53, அசித்த பெர்னாண்டோ 3/38, அஷைன் டேனியல் 3/51, சச்சிந்து கொலம்பகே 2/37

கண்டி அணி – 94/3 (28) – கமிந்து மெண்டிஸ் 48*, கமில் மிஷார 25, லக்ஷித மானசிங்க 3/40

தம்புள்ளை எதிர் காலி

தம்புள்ளை அணிக்கெதிராக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் காலி அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 225 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த கண்டி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 418 ஓட்டங்களைக் குவித்தது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மினோத் பானுக சதம் கடந்து 163 ஓட்டங்களையும், நிமேஷ குணசிங்க சதம் கடந்து 103 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

காலி அணியின் பந்துவீச்சில் சானக ருவன்சிறி 4 விக்கெட்டுகளையும், அகில தனன்ஞய 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தனன்ஞய லக்ஷான் 93 ஓட்டங்களையும், ஹஷான் துமிந்து 59 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 418 (116.1) – மினோத் பானுக 163, நிமேஷ குணசிங்க 103, லஹிரு சமரகோன் 37*, சானக ருவன்சிறி 4/62, அகில தனன்ஞய 3/98

காலி அணி – 225/2 (63) – தனன்ஞய லக்ஷான் 93*, ஹஷான் துமிந்து 59*, பபசர வடுகே 34, சங்கீத் குரே 32

இந்த இரண்டு போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை (12) தொடரும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<