இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (10) ஆரம்பமாகின.
இதில் கண்டி அணிக்காக ஓஷத பெர்னாண்டோவும், தம்புள்ளை அணிக்காக மினோத் பானுக மற்றும் நிமேஷ குணசிங்க ஆகியோர் சதங்களை குவித்து அசத்தியிருந்தனர்.
கண்டி எதிர் கொழும்பு
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி முதல் இன்னிங்ஸுக்காக 71 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாண்டோ சதம் கடந்து 105 ஓட்டங்களை அதிபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கசுன் விதுர 43 ஓட்டங்களைக் குவித்தார்.
இம்முறை தேசிய சுபர் லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் ஓஷத பெர்னாண்டோ, காலி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்து அசத்தியிருந்ததுடன், கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாண அணிக்க்கு எதிரான போட்டியில் அரைச்சதம் அடித்திருந்தார்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷித மானசிங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் நிசல தாரக ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 241 (71) – ஓஷத பெர்னாண்டோ 105, கசுன் விதுர 43, பிரபாத் ஜயசூரிய 3/47, லக்ஷித மாசிங்க 3/59, கசுன் ராஜித 2/43, நிசல தாரக 2/61
கொழும்பு அணி – 28/4 (13.4) – நுவனிது பெர்னாண்டோ 12, நிபுன் தனன்ஞய 6, அசித்த பெர்னாண்டோ 2/12, அஷைன் டேனியல் 1/8
- கண்டி அணிக்காக அரைச்சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ
- கண்டி அணிக்காக சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ்
- இளம் வீரர்களின் பிரகாசிப்பால் கொழும்பு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
தம்புள்ளை எதிர் காலி
மினோத் பானுக (140) மற்றும் நிமேஷ குணசிங்க (103) ஆகியோரது சதங்களின் உதவியுடன் காலி அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தம்புள்ளை அணி வலுவான நிலையில் உள்ளது.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.
இந்தப்போட்டியில் தம்புள்ளை அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித்தலைவர் மினோத் பானுக சதம் கடந்து 140 ஓட்டங்களை ஆட்டமிழக்கமால் பெற்றுக்கொண்டார். முதல்தர கிரிக்கெட்டில் மினோத் பானுகவின் 12 ஆவது சதம் இதுவாகும்.
மறுபுறத்தில் தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிமேஷ குணசிங்க முதல்தரப் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதனிடையே, காலி அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஞய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
தம்புள்ளை அணி – 332/5 (89.3) – மினோத் பானுக 140, நிமேஷ குணசிங்க 103, பவந்த வீரசிங்க 29, லியோ பிரான்சிஸ்கோ 17, அகில தனன்ஞய 3/74, சானக ருவன்சிறி 1/40
இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (11) தொடரும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<