NSL தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது கண்டி அணி

National Super League Four Day Tournament 2022

229

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற அங்குரார்ப்பண நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண அணியை வீழ்த்தி கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணி சம்பியனாக மகுடம் சூடியது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்ததன் மூலம் கண்டி அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, ஓஷத பெர்னாண்டோவின் அபார சதம் மற்றும் கமிந்து மெண்டிஸ், கசுன் விதுர, கமில் மிஷார ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்களைக் குவித்தது.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் திலும் சுதீர 4 விக்கெட்டுகளையும், தனன்ஞய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க அதிகபட்சமாக 57 ஓட்டங்களை எடுத்தார்.

கண்டி அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயRபட்ட லசித் எம்புல்தெனிள 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அஷைன் டேனியல் 3 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 217 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்களை எடுத்து காணப்பட்டது.

இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்று (10) முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து மதியம் 1.45 மணியளவில் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்த கண்டி அணி, அங்குரார்ப்பண நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.

முன்னதாக நடைபெற்ற நெஷனல் சுபர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் கண்டி அணியை தனன்ஞய டி சில்வா தலைமையிலான யாழ்ப்பாண அணி வீழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகிய கண்டி அணிக்கு 50 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பிடித்த யாழ்ப்பாண அணி;க்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆறு போட்டிகள், 11 இன்னிங்சுகளில் 886 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்த கண்டி அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் இந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தத் தொடரில் நான்கு சதங்கள் மற்றும் நான்கு அரைச்சதங்களை அவர் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, கண்டி அணியின் ஓஷத பெர்னாண்டோ சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார். கண்டி அணியின் 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான ஓஷத 11 இன்னிங்சுகளில் 80.11 என்ற சராசரியுடன் 721 ஓட்டங்களைப் பெற்றார். இதில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைச்சதங்கள் அடங்கும்.

இதனிடையே, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை கொழும்பு அணியின் பிரபாத் ஜயசூரிய வென்றார். 4 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 444 (131.2) – ஓஷத பெர்னாண்டோ 109, கமிந்து மெண்டிஸ் 87, கசுன் விதுர 71, கமில் மிஷார 56, புலின தரங்க 43, நிரோஷன் டிக்வெல்ல 32, திலும் சுதீர 4/86, தனன்ஞய டி சில்வா 3/96, ஜெப்ரி வெண்டர்சே 2/97

யாழ்ப்பாண அணி – 227 (89.1) – நிஷான் மதுஷ்க 57, திலும் சுதீர 49*, தனன்ஞய டி சில்வா 30, லசித் எம்புல்தெனிய 4/100, அஷைன் டேனியல் 3/89, அசித்த பெர்னாண்டோ 2/25

கண்டி அணி – 52/1 (15) – கமில் மிஷார 26, கசுன் விதுர 16*, ஓஷத பெர்னாண்டோ 9*

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<