இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் போட்டித்தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்றைய தினம் (16) நடைபெற்றன.
இதில், கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை தக்கவைத்த ஜப்னா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதுடன், மற்றுமொரு போட்டியில் காலி அணியை கண்டி அணி இலகுவாக வீழ்த்தியுள்ளது.
முதலிடத்தை இழந்த ஹஸரங்க! ; பெதும், மஹீஷ், சமீரவுக்கு முன்னேற்றம்
கொழும்பு எதிர் ஜப்னா
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜப்னா அணி, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொழும்பு அணிக்கு வழங்கியது. கொழும்பு அணி சார்பாக ரொஷேன் சில்வா இறுதிவரை களத்தில் நின்று துடுப்பெடுத்தாடியிருந்ததுடன், நுவனிந்து பெர்னாண்டோ சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இவர்கள் இருவரைத் தவிர்த்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவற, கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. ரொஷேன் சில்வா ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நுவனிந்து பெர்னாண்டோ 37 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் தனன்ஜய டி சில்வா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா அணியின் சார்பாக அணித்தலைவர் தனன்ஜய டி சில்வா இறுதிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவியதுடன், சதீர சமரவிக்ரம மற்றும் சந்துஷ் குணதிலக்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
தனன்ஜய டி சில்வா ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களையும், சந்துஷ் குணதிலக்க 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ஜப்னா அணி 46.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. கொழும்பு அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காலி எதிர் கண்டி
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கண்டி அணி, காலி அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பறித்ததுடன், தங்களுடைய ஆறாவது வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்ததுடன், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் லஹிரு உதார ஆகியோரின் மிகச்சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 343 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் லஹிரு உதார ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 233 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது, லிஸ்ட் ஏ போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது. நிரோஷன் டிக்வெல்ல 104 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கலாக 135
ஓட்டங்களையும், லஹிரு உதார 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்களையும் பெற்றுக்காண்டனர். பந்துவீச்சில், சலன டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி வெற்றியிலக்கை கவிஷ்க அஞ்சுல, விஷாட் ரந்திக மற்றும் பபசர வதுகே ஆகியோரின் துடுப்பாட்டங்களின் உதவியுடன் அடைய முயற்சித்தபோதும், 47.1 ஓவர்கள் நிறைவில் 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கவிஷ்க அஞ்சுல இறுதிவரை போராடியிருந்தாலும் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, விஷாட் ரந்திக 47 ஓட்டங்களையும், பபசர வதுகே 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அஷேன் டேனியல் 4 விக்கெட்டுகளையும், புலின தரங்க 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எனவே, இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற கண்டி அணி புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், ஜப்னா அணி 22 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. எனவே, இந்த இரண்டு அணிகளும் எதிர்வரும் 19ம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<