ஜப்னாவின் வெற்றியை இலகுவாக்கிய சதீர ; சுழல் பந்துவீச்சில் அசத்திய தரங்க!

Dialog-SLC National Super League 2022

756

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் 50 ஒவர்கள் கொண்ட போட்டித்தொடரின் இன்றைய போட்டிகளில் கொழும்பு அணியை ஜப்னா அணி எதிர்கொண்டதுடன், கண்டி அணியை காலி அணி எதிர்கொண்டது.

கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்ய, காலி அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

>>ஆஸி. தொடருக்காக இணைக்கப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட்-19!

கொழும்பு எதிர் ஜப்னா

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் சதீர சமரவிக்ரமவின் சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸின் உதவியுடன் ஜப்னா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டிருந்த கொழும்பு அணி, ஒரு கட்டத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன உட்பட முதல் நான்கு விக்கெட்டுகளையும் 53 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றம் காட்டியது.

ஆனாலும் சம்மு அஷான் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, கொழும்பு அணி 164 ஓட்டங்களுக்கு தமது 5வது விக்கெட்டை இழந்தது. சம்மு அஷான் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அஷேன் பண்டார அரைச்சதம் கடந்தார்.

இறுதியாக லஹிரு மதுஷங்க 30 பந்துகளுக்கு 42 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து கொழும்பு அணி  247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில், நிமந்த மதுசங்க 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் ஜப்னா அணிக்காக விளையாடிய தமிழ்பேசும் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த், களத்தடுப்பில் ஈடுபடும் போது, உபாதைக்கு முகங்கொடுத்ததால், மைதானத்திலிருந்து வெளியேறினார். இவர், எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சற்று கடினமான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா அணிக்கு சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்ததுடன், லஹிரு திரிமான்ன 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், சதீர சமரவிக்ரம சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிக்க, அடுத்து களமிறங்கிய தமித்த சில்வா மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அணித்தலைவர் தனன்ஜய டி சில்வா ஆட்டமிழந்த போதும், சதீர சமரவிக்ரம இறுதிவரை களத்தில் நின்று அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

சதீர சமரவிக்ரம இறுதிவரை ஆட்டமிழக்காமல் 95 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் சந்துஷ் குணதிலக்க 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனவே, 46.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கண்டி எதிர் காலி

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற காலி அணிக்கு எதிரான போட்டியில், முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் புலின தரங்கவின் அபார சுழல் பந்துவீச்சின் உதவியுடன் கண்டி அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த காலி அணிக்கு நினைத்த அளவிலான சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. கண்டி அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் லஹிரு உதார ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

நிரோஷன் டிக்வெல்ல 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், தொடர்ந்து களமிறங்கிய கண்டி அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர். குறிப்பாக லஹிரு உதார 63 ஓட்டங்களையும், லசித் குரூஸ்புள்ளே 46 ஓட்டங்களையும், முதல் போட்டியில் சதம் விளாசிய ஓசத பெர்னாண்டோ 56 ஓட்டங்கள் என சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.

இதில் ஓசத பெர்னாண்டோ ஆட்டமிழக்கும் போது, 44.1 ஓவரில் கண்டி அணி 244 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், காலி அணியின் அகில தனன்ஜய தொடர்ந்து வருகைத்தந்த பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த கண்டி அணி 269 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அகில தனன்ஜய சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணியை பொருத்தவரை, அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பபசர வதுகே அரைச்சதம் கடந்து நம்பிக்கை கொடுத்தாலும், முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியதால் காலி அணி தோல்வியை தழுவிக்கொண்டது.

பபசர வதுகெ 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, காலி அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு புலின தரங்க கடும் சவாலை கொடுத்தார். காலி அணி 102 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த போதும், புலின தரங்க அபார பந்துவீச்சின் ஊடாக 6 விக்கெட்டுகளை வீழ்த்த 42.2 ஓவர்கள் நிறைவில் காலி அணி 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பபசர வதுகே அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அஷான் ரந்திக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். புலின தரங்க பந்துவீச்சில் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை, இன்றைய போட்டி முடிவுகளின் அடிப்படையில் 15 புள்ளிகளுடன் கண்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், ஜப்னா அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<