திமுத்துடன் பிரகாசித்த இளம் வீரர்கள்

Dialog-SLC National Super League 2022

1404

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் SLC-டயலொக் தேசிய சுப்பர் லீக் 50 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடரின் மூன்றாவது நாளுக்கான இரண்டு போட்டிகள் இன்று (28) நடைபெற்றன.

இதில், திமுத் கருணாரத்ன தலைமையிலான கொழும்பு அணி மற்றும் பிரியமல் பெரேரா தலைமையிலான காலி அணி என்பன தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

T20i கிரிக்கெட்டிற்கு தற்காலிக விடைகொடுக்கும் தமிம் இக்பால்

தம்புள்ள எதிர் காலி

SLC-டயலொக் தேசிய சுப்பர் லீக் தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் தம்புள்ள அணி, இன்றைய தினம் நடைபெற்ற காலி அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தம்புள்ள அணி மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஹேஷான் ஹெட்டியாராச்சி மற்றும் தனன்ஜய லக்ஷானின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் முதல் மூன்று விக்கெட்டுகளை 17 ஓட்டங்களுக்கு இழந்த நிலையில், பவன் ரத்நாயக்க மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிரந்தனர்.

எனினும், பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களுடனும், துஷான் ஹேமந்த 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க 108 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், இறுதி விக்கெட்டுக்காக லக்ஷான் சந்தகன் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் 68 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பலமளித்தனர்.

இதன்மூலம் தம்புள்ள அணி 49.3 ஓவர்கள் நிறைவில், 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லக்ஷான் சந்தகன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, விஷ்வ பெர்னாண்டோ 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஹேஷான் ஹெட்டியாராச்சி, தனன்ஜய லக்ஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முதித லக்ஷான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி அஷான் ரந்திக, தனன்ஜய லக்ஷான் மற்றும் முதித லக்ஷான் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புடன் 34.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அஷான் ரந்திக அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, பிரியமல் பெரேரா, ஹிமாஷ் லியனகே மற்றும் டுஷான் விமுக்தி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும் முதித லக்ஷான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில், லஹிரு சமரகோன் 3 விக்கெட்டுகளையும், அஷான் பிரியன்ஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கண்டி எதிர் கொழும்பு

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கண்டி அணி நிர்ணயித்த 272 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன தலைமையிலான கொழும்பு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. கண்டி அணி சார்பாக செஹான் ஆராச்சிகே மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, புலின தரங்க, லசித் குரூஸ்புள்ளே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் பங்களிப்புடன் 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய போதும் 86 ஓட்டங்களை குவித்திருந்த செஹான் ஆராச்சிகே சதத்தை தவறவிட்டார். இவருக்கு அடுத்தப்படியாக புலின தரங்க 36 ஓட்டங்கள், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்கள் மற்றும் லசித் குரூஸ்புள்ளே 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர். கொழும்பு அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுகளையும், கலன பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. திமுத் கருணாரத்ன மற்றும் சிதார கிம்ஹான் ஆகியோர் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். சிதார கிம்ஹான 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர்களான நிபுன் தனன்ஜய மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி, அணியின் வெற்றியை இலகுவாக்கினர். நுவனிந்து பெர்னாண்டோ 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிபுன் தனன்ஜய ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். மறுமுனையில் அஷேன் பண்டார 33 ஓட்டங்களை பெற 48.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து கொழும்பு அணி வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே இன்றைய 2 போட்டிகளை பொருத்தவரை, காலி அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் கொழும்பு அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<