ஷானகவின் பொறுப்பான ஆட்டத்தால் கிரேய்ஸ் அணிக்கு 2வது வெற்றி

Dialog-SLC Invitational T20 League 2021

1579

டயலொக் SLC அழைப்பு T20 லீக்கில் இன்று (14) நடைபெற்ற முதல் போட்டியில், SLC ரெட்ஸ்  அணியை எதிர்கொண்ட, தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய கிரேய்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

142ஆவது நீலங்களின் சமர் மீண்டும் ஒத்திவைப்பு

கிரேய்ஸ் அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைக்காத போதும், அணியின் தலைவர் தசுன் ஷானக, மத்தியவரிசையில் முதல் போட்டி போன்று இன்றைய தினமும் ஓட்டங்களை நிதானமாக குவித்து அணியை மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றார்.

ஒருகட்டத்தில் கிரேய்ஸ் அணி 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுதமாறியது. எனினும், தசுன் ஷானக 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக புலின தரங்க 10 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், கமில் மிஷார 18 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ரெட்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SLC ரெட்ஸ் அணி, முதல் போட்டியை போன்று, இந்த போட்டியிலும் துடுப்பாட்டத்தில் சறுக்கியதுடன், ஓசத பெர்னாண்டோ மாத்திரம் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், ரெட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ரெட்ஸ் அணிசார்பாக ஓசத பெர்னாண்டோ, தொடரில் தன்னுடைய முதல் அரைச்சதத்தை பதிவுசெய்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக அசேல குணரத்ன 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க, நுவான் பிரதீப் மற்றும் அஷைன் டேனியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, SLC கிரேய்ஸ் அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும், வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், SLC ரெட்ஸ்  அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியில், SLC புளூஸ் மற்றும் SLC கிரீன்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…