டயலொக் SLC அழைப்பு T20 லீக் கிரிக்கெட் தொடரின், இறுதிப் போட்டியில் SLC ரெட்ஸ் அணியை எதிர்கொண்ட SLC கிரேய்ஸ் அணி, சகலதுறையிலும் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற SLC கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. கிரேய்ஸ் அணியை பொருத்தவரை, இறுதிப் போட்டிக்கு தோல்விகளின்றி பயணித்ததுடன், ரெட்ஸ் அணி தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டு, கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றது.
இலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
இரண்டு அணிகளும் சம பலத்துடன் களமிறங்கிய நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிரேய்ஸ் அணி, மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தியது. தேசிய அணியில் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு, மினோத் பானுக இந்தப் போட்டியில் பிரகாசிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது.
இவ்வாறான அழுத்தத்துக்கு மத்தியில் களமிறங்கிய போதும், மினோத் பானுக சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்ததுடன், கிரேய்ஸ் அணி சிறந்த ஆரம்பத்தை பெறுவதற்கும் உதவினார். அந்தவகையில், மினோத் பானுக 51 பந்துகளில் 12 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மறுமுனையில் அணித்தலைவர் தசுன் ஷானக வெறும் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் புதுமுக வீரர் நுவனிந்து பெர்னாண்டோ 36 பந்துகளில் 47 ஓட்டங்களையும், லஹிரு மதுஷங்க 3 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அகில தனன்ஜய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர்களின் இந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன், கிரேய்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டித்தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியது.
பின்னர், மிகப்பெரிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரெட்ஸ் அணி, லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் இளம் வீரர் மதீஷ பதிரணவின் பந்துவீச்சில், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்ததுடன், கடந்த போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துவந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை, நுவான் பிரதீப் கைப்பற்றினார்.
குறித்த மூன்று விக்கெட்டுகளை தொடர்ந்து, வேகமான துடுப்பாட்டத்தால் ஓசத பெர்னாண்டோ மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் நம்பிக்கை கொடுத்த போதும், சரியான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரேய்ஸ் அணி, வெற்றியை தமதாக்கிக்கொண்டது.
SLC ரெட்ஸ் அணியானது, 19.4 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரெட்ஸ் அணிசார்பாக அதிகபட்சமாக ஓசத பெர்னாண்டோ 27 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், அகில தனன்ஜய 25 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் புலின தரங்க, நுவான் பிரதீப் மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் சீக்குகே பிரசன்ன
போட்டித்தொடரை பொருத்தவரை, முழுத்தொடரில் சிறப்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த தசுன் ஷானக, 64.50 என்ற சராசரியில், 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அத்துடன், தொடரில், நுவான் பிரதீப், புலின தரங்க, சீககே பிரசன்ன மற்றும் ஹிமேஷ் ராமநாயக்க ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர்.
டயலொக் SLC அழைப்பு T20 வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணிக்கு, 2 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாவது இடத்தை பிடித்த ரெட்ஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. அத்துடன், தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற தசுன் ஷானகவுக்கு 2 இலட்சம் ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<