டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் இன்று (18) நடைபெற்ற SLC கிரீன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், தசுன் ஷானக மற்றும் கமில் மிஷார ஆகியோரின் அற்புதமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் SLC கிரேய்ஸ் அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.
போட்டியின் நாணய சுழற்சியில் கிரீன்ஸ் அணி வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வுசெய்தது. இதற்கிடையில் போட்டியில் மழை குறிக்கிட்டது. இதன் காரணமாக அணிக்கு தலா 13 ஓவர்கள் என போட்டி ஆரம்பித்தது. எனினும், கிரேய்ஸ் அணி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. எனவே, மீண்டும் அணிக்கு 10 ஓவர்களாக ஆட்டம் மட்டுப்படுத்தப்பட்டது.
ஹிமேஷ், சந்திமாலின் பிரகாசிப்புடன் ரெட்ஸ் அணிக்கு 2வது வெற்றி
குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியென்பதால், மிகவும் விறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து கிரேய்ஸ் அணி 137 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் தசுன் ஷானக வெறும் 22 பந்துகளில் அரைச்சதம் கடந்து, இந்த தொடரில் வேகமான அரைச்சதத்தை பதிவுசெய்தார்.
இவர் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மறுமுனையில் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், ஆரம்பித்த இந்தப்போட்டியில், கிரேய்ஸ் அணியின் நுவான் பிரதீப் முதலாவது பந்து ஓவரை வீச, முதல் 4 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக, லஹிரு உதார 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும், போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதனைத்தொடர்ந்து ஆரம்பித்த இந்தப்போட்டியில், டக்வர்த் லூவிஸ் முறைப்படி கிரீன்ஸ் அணிக்கு 8 ஓவர்களுக்கு 111 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, களமிறங்கிய கிரீன்ஸ் அணி 5.3 ஓவர்கள் நிறைவில், 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதன்போது, அதிகபட்சமாக லஹிரு உதார 10 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, இவருக்கு அடுத்தப்படியாக பெதும் நிஸ்ஸங்க 12 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்திருந்தார். கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கிரீன்ஸ் அணிக்கு 15 பந்துகளுக்கு 42 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், தொடர்ந்து போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிரேய்ஸ் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியுடன் கிரேய்ஸ் அணியானது, 4வது வெற்றியை பதிவுசெய்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளதுடன், கிரீன்ஸ் அணியானது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கும் நிலையை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…