டயலொக் SLC அழைப்பு T20 தொடரில், SLC புளூஸ் மற்றும் SLC கிரேய்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று (22) நடைபெற்ற முதல் போட்டி, சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புளூஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்க, கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிரேய்ஸ் அணி, சரித் அசலங்க மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன், 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கிரேய்ஸ் அணிசார்பாக சரித் அசலங்க 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நுவனிந்து பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில், கலன பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புளூஸ் அணி 3.5 ஓவர்களில் 33 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியில் மழை குறுக்கிட்டதுடன், ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியில் மழை குறுக்கிட்டதால், போட்டியானது கைவிடப்பட்டதுடன், அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, புளூஸ் அணி 6 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளதுடன், கிரேய்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், கிரீன்ஸ் அணி ஒரு புள்ளியுடன் இறுதி இடத்தை பிடித்துள்ளதுடன், ரெட்ஸ் அணி 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<