முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரில் இந்த வாரம், கிண்ணம் (CUP) மற்றும் தகட்டுக்கான (Plate) சுப்பர் சுற்றுத் போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில், கிண்ணத்துக்கான போட்டியில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த CH&FC அணியை கண்டி அணி வீழ்த்தியதுடன், ஹெவ்லொக் அணி, CR&FC அணியை வீழ்த்தியது. இதன்படி, வெற்றிபெற்ற குறித்த இரண்டு அணிகளும் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோத தகுதிபெற்றுள்ளன.
ஆறு வருடங்களுக்கு பின்னர் கண்டியை வீழ்த்திய ஹெவ்லொக் அணி
முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி….
CR&FC எதிர் ஹெவ்லொக் விளையாட்டு கழகம்
CR&FC அணிக்கு எதிரான கிண்ணத்துக்கான சுப்பர் சுற்றுப் போட்டியில் ஹெவ்லொக் அணி 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, தொடர்ந்தும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையை தக்கவைத்துள்ளது.
நேற்று முன்தினம் ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதற்பாதியில், இரண்டு அணிகளும் 07-07 என்ற புள்ளிகள் கணக்கில் சமனிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெவ்லொக் அணி 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
கண்டி விளையாட்டு கழகம் எதிர் CH&FC
கண்டி – நிட்டவெல மைதானத்தில் நடைபெற்ற கிண்ணத்துக்கான மற்றுமொரு போட்டியில் CH&FC அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணி 31-13 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியினை பதிவுசெய்தது. அத்தடன், CH&FC அணியின் தொடர் வெற்றிகளுக்கு கண்டி அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதற்பாதியில் CH&FC அணி 06-03 என்ற முன்னிலையை பெற்றிருந்த போதிலும், இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடிய கண்டி அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.
இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம்
விமானப்படை அணிக்கு எதிராக வெலிசறையில் நடைபெற்ற தகட்டுக்கான (Plate) சுற்றில், இரண்டாவது பாதியில் அபார ஆட்டத்தை காண்பித்த இராணுவப்படை அணி, த்ரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.
ஆட்டத்தின் முதற்பாதியில் முன்னிலையை தக்கவைத்துக்கொண்ட விமானப்படை அணி, 18 புள்ளிகளை குவித்துக்கொள்ள, இராணுவப்படை அணி வெறும் 07 புள்ளிகளை மாத்திரமே பெற்றது. எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய இராணுவப்படை அணி 29-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி ஈட்டியது.
Photos : Kandy SC v CH & FC – Dialog Rugby League 2018/19 | Super Round (Cup)
ThePapare.com | Omalka erandeera | 24/02/2019 Editing and…..
பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்
பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு தகட்டுக்கான சுற்றுப் போட்டியில், கடற்படை அணியை எதிர்கொண்ட பொலிஸ் அணி, 34-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் முதற்பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், பொலிஸ் அணி 19-18 என ஒரு புள்ளியினால் முன்னிலைப்பெற்றது. எனினும், தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது பாதியில் முன்னிலையை அதிகரித்துக்கொண்ட பொலிஸ் அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.