டயலொக் ரக்பி லீக் தொடரின் ஐந்தாம் வாரத்திற்கான முதல் போட்டி இன்று CH & FC மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டி 21 – 21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
மழைத்தூறலின் மத்தியில் போட்டி ஆரம்பமானதுடன் அதன் காரணமாக முதல் சில நிமிடங்களில் போட்டி மந்த கதியுடனே இடம்பெற்றது. இரு அணிகளும் பந்தை தொடர்ந்து கையிருப்பில் வைக்கத் தவறியதுடன், ட்ரை வைப்பதற்கான சாத்தியம் குறைவு என்பதை உணர்ந்து கொண்ட பொலிஸ் அணியானது தமக்கு கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் கம்பங்களை நோக்கி உதைக்க முடிவு செய்தது. சந்தேஷ் ஜயவிக்ரம இரண்டு உதைகளையும் சிறப்பாக உதைத்து தனது அணிக்கு 06 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். (பொலிஸ் 06 – 00 CH & FC)
ஆடுகளத்தின் ஈரத்தன்மை மற்றும் பந்தைக் கைமாற்றுவதில் சிரமம் காணப்பட்டதால் அடுத்த சில நிமிடங்களுக்கு இரண்டு அணிகளாலும் புள்ளிகள் எதனையும் பெற இயலவில்லை. எனினும் போட்டியின் முதல் ட்ரையினை CH & FC அணியின் புல் பாக் (Full Back) வீரரான இரங்க ஆரியபால வைத்தார். கொன்வெர்சன் உதையை சேமுவல் மதுவந்த இலகுவாக உதைத்தார். (பொலிஸ் 06 – 07 CH & FC)
CH & FC அணியின் எதிர்தாக்குதலை மீறி மயிரிழையில் வெற்றியீட்டியது ஹெவலொக்
அதற்கு பதிலளிக்கும் முகமாக பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் கிஹான் சில்வா ட்ரை ஒன்றை வைத்ததுடன், கொன்வெர்சன் உதையை சந்தேஷ் ஜயவிக்ரம குறிதவறாது உதைத்தார். முதல் பாதி நிறைவடையும் தருவாயில் CH & FC அணியின் கசுன் சில்வா ட்ரை ஒன்றை வைத்து புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார். கடினமான உதையை மதுவந்த தவறவிட, முதல் பாதி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முடிவடைந்தது. (பொலிஸ் 13 – 12 CH & FC)
முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 13 – 12 CH & FC
இரண்டாம் பாதியில் இரு அணிகளின் வீரர்களும் வெற்றியை சுவீகரிக்கும் நோக்குடன் களமிறங்கியதுடன் ஆட்டம் சூடுபிடித்திருந்தது. இப்பாதியிலும் சீரற்ற காலநிலை காரணமாக இரு அணிகளாலும் ட்ரை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள இயலவில்லை. எவ்வாறாயினும் CH & FC அணியின் சேமுவல் மதுவந்த தனக்கு கிடைத்த பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்து தனது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். (பொலிஸ் 13 – 15 CH & FC)
சில நிமிடங்கள் கழிந்த நிலையில் CH & FC அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததுடன், இம்முறையும் மதுவந்த தனது சிறப்பான உதையின் மூலம் மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். எனினும் தளராது போராடிய பொலிஸ் அணியானது, அஷான் பெர்னாண்டோ மூலம் ட்ரை ஒன்றை வைக்க இரு அணிகளின் புள்ளிகளும் சமனாகின. (பொலிஸ் 18 – 18 CH & FC)
இறுதி பத்து நிமிடங்களில் இரு அணிகளும் எவ்விதத்திலாவது புள்ளிகளை பெற்று முன்னிலை பெரும் முனைப்பில் போட்டியிட்டன. இந்நிலையில் முறைதவறிய ஆட்டம் காரணமாக பொலிஸ் அணி வீரர் சுஜான் கொடிதுவக்குவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட CH & FC அணி, மதுவந்தவின் அபார உதையின் ஊடாக மூன்று புள்ளிகளை பதிவு செய்து கொண்டது. (பொலிஸ் 18 – CH & FC 21)
உபாதையிலிருந்து மீண்டு வரும் கெவின் டிக்சன்
இறுதி நிமிடங்களில் போட்டியானது பொலிஸ் அணியிடமிருந்து நழுவிக் கொண்டிருந்த நிலையில், அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிட்டியது. கடினமான உதையை லாவகமாக உதைத்த சந்தேஷ் ஜயவிக்ரம புள்ளிகளை மீண்டும் சமப்படுத்தி தமது அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதி வினாடிகளில் இரண்டு அணிகளும் புள்ளிகளைப் பெற தவறியதால், போட்டி 21 – 21 என சமநிலையில் நிறைவு பெற்றது. (பொலிஸ் 21 – 21 CH & FC)
முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 21 – 21 CH & FC
ThePapare.com இன் ஆட்டநாயகன் – சந்தேஷ் ஜயவிக்ரம (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
CH & FC – இரங்க ஆரியபால 1T, கசுன் சில்வா 1T, சேமுவல் மதுவந்த 1C 3P
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – கிஹான் சில்வா 1T, அஷான் பெர்னாண்டோ 1T, சந்தேஷ் ஜயவிக்ரம 1C 3P
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகம் ஆகியன வெலிசரை கடற்படை மைதானத்தில் மோதிக்கொண்டன.
சீரற்ற காலநிலை காரணமாக இரு அணி வீர்ர்களும் பந்தைக் கையாழ்வதில் அதிகமாக தவறிழைத்தனர்.
தமது சொந்த மைதானத்தில் கடற்படை அணி முழு ஆதிக்கத்தையும் செலுத்தி போட்டியை வெல்லும் நோக்குடன் விளையாடியது. இதனால் முதல் பாதியை 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையுடன் கடற்படை அணி முடித்துக்கொண்டது.
இரண்டாம் பாதியில் கடற்படை அணி மேலதிகமாக 3 புள்ளிகளைப் பெற விமானப்படை அணியால் எவ்வித புள்ளிகளையும் பெற முடியவில்லை. இதனால் போட்டி முடிவில் கடற்படை விளையாட்டுக் கழகம் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படையை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்தது.
முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 10 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்