டயலொக் ரக்பி லீக் தொடரின் இரண்டாவது வாரப் போட்டிகள் சனிக்கிழமை (12ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளன. சனிக்கிழமை 3 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி இடம்பெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கடற்படை அணி மற்றும் CR & FC அணிகளுக்கிடையிலான போட்டி அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு போட்டியாக அமையவுள்ளது.
பொலிஸ் அணி மற்றும் ஹெவலொக்அ ணிகளுக்கிடையிலான போட்டி
இடம் – பொலிஸ் பார்க் மைதானம்
காலம் – 2016.11.12 (சனிக்கிழமை)
நேரம் – மாலை 4 மணி
சென்ற வாரத் தோல்வியின் பின்னர் பொலிஸ் அணிக்கு அதிக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அணியின் பயிற்றுவிப்பாளர் சுதத் சம்பத், ஹெவலொக் அணியின் சவால் பற்றி நன்கு அறிவார்.
சென்ற வருடம் பாடசாலையிலிருந்து வெளியான, புனித பேதுரு கல்லூரியின் முன்னாள் தலைவர் சந்தேஷ் ஜெயவிக்ரம மற்றும் ஸாஹிரா அணியின் வீரர் வாஜித் பஹ்மி ஆகியோர் சென்ற வாரம் பொலிஸ் அணி சார்பாக அறிமுகமாகினர். இவர்கள் இருவரும் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை கனிஷ்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடுவது அவர்கள் இருவருக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
ஹெவலொக் அணி கடந்த வாரம் விமானப்படை அணியுடன் வெற்றிபெற்றது. தனது முன் வரிசையில் அனுபவமிக்க பல வீரர்களை கொண்டுள்ள ஹெவலொக் அணியின் தலைவர் துஷ்மந்த ப்ரியதர்ஷனவின் உதவியுடன் இவ்வாரமும் அவ்வணி அதிக ஆதிக்கம் செலுத்த எண்ணியுள்ளது. மேலும் சிறப்பான பின்வரிசை வீரர்களான துலாஜ் பெரேரா, ஹிரந்த பெரேரா மற்றும் நிஷோன் பெரேரா ஆகியோர் ஹெவலொக் அணியின் வசம் போட்டியை திசை திருப்பக் கூடியவர்களாக உள்ளனர்.
அவதானத்திற்குறிய வீரர்கள் (பொலிஸ் அணி) – பிளேன்கர் ரதீஷ செனவிரத்ன எதிரணியின் பலத்தை சிறப்பாக தடுக்க கூடியவர். மேலும் திறமை மிக்க வீரரான முஷீன் பலீல் சென்ற வாரம் காணப்பட்ட மழை நிலமையால் தனது சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டவில்லை. இவ்வாரம் தனது திறமையை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவதானத்திற்குறிய வீரர்கள் (ஹெவலொக் அணி) – நிரோஷான் பெரேராவின் சிறப்பான உதை ஹெவலொக் அணியின் பலமாகும். ஒரு வருட காலம் உபாதையின் காரணமாக ஓய்வில் இருந்த அவர் தனது உச்ச திறமையை மீண்டும் வெளிக்காட்ட சில போட்டிகள் எடுக்கலாம். சென்ற வருடம் பொலிஸ் அணி சார்பாக விளையாடிய ஷாரோ பெர்னாண்டோ மற்றும் சாமர தாபரே பொலிஸ் அணியைப் பற்றி அறிந்திருப்பதால் ஹெவலொக் அணிக்கு இது பலமாக அமையும்
விமானப்படை அணி மற்றும் கண்டி கழகத்திற்கு இடையிலான போட்டி
இடம் – ரத்மலான
காலம் – 2016.11.12 (சனிக்கிழமை)
நேரம் – மாலை 4 மணி
சென்ற வருட சம்பியனான கண்டி கழகம், சென்ற வாரம் இடம்பெற்ற தமது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றுக்கொண்டது. ரொஷான் வீரரத்னவின் தலைமையின் கீழ் 96-00 என CH & FC அணியை வென்ற கண்டி அணி இவ்வருடமும் தனது ஆதிக்கத்தை முதல் போட்டியிலேயே காண்பித்தது.
எனினும் சென்ற வருடம் விமானப்படை அணியுடனான போட்டியின் முதல் பாதியில் விமானப்படை அணி கண்டி அணிக்கு பாரிய சவால் கொடுத்தது. இந்நிலையில் இப்போட்டி கண்டி அணிக்கு இலகுவாக அமையாது எனலாம். கண்டி அணி இவ்வருடம் அனைத்து போட்டிகளையும் வெற்றிகொள்வதற்கான சூத்திரத்தை தன்னகம் கொண்டுள்ளது.
அவதானத்திற்குறிய வீரர்கள் (கண்டி அணி) – சென்ற வார போட்டியில் 4 ட்ரைகளை வைத்த தனுஷ்க ரஞ்சன் விமானப்படை அணிக்கு சவாலாக அமைவார். அதேபோன்று, அர்ஷாத் ஜமால்தீன் 10 உதைகள் மற்றும் ஒரு ட்ரையுடன் 25 புள்ளிகளை சென்ற வார போட்டியில் கண்டி அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார். பயிற்றுவிப்பாளரான நாலக வீரக்கொடியின் உதவியுடன் அவர் தனது திறமையை செம்மைப்படுத்தியது கண்டி அணிக்கு பெரும் பலமாகும்.
அவதானத்திற்குறிய வீரர்கள் (விமானப்படை அணி) – பின் வரிசை வீரரான நுவன் பெரேரா சென்ற வருடம் வெளிக்காட்டிய திறமையை இவ்வருடம் இன்னும் வெளிக்காட்டவில்லை. மேலும், ஆசிய இளையோர் ரக்பி கிண்ணத்திற்கான இலங்கை கனிஷ்ட அணியில் உள்ளடக்கப்பட்டுள்ள ரோயல் கல்லூரியின் ஸ்க்ரம் ஹாப் வீரர் அஷோக் விஜேகுமார் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
CH & FC அணி மற்றும் இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டி
இடம் – கொழும்பு ரேஸ் கோஸ் மைதானம்
காலம் – 2016.11.12 (சனிக்கிழமை)
நேரம் – மாலை 4 மணி
சென்ற வாரப் போட்டி CH & FC அணியின் மைதானத்தில் நடைபெற இருந்த பொழுதும் அது கண்டி மைதானத்தில் நடைப்பெற்றது. மேலும், இப்போட்டிக்காக அவ்வணி மாலை 2 மணிக்கு கண்டியை சென்றடைந்து 4 மணிக்கு போட்டியில் கலந்து கொண்டு நடப்புச் சம்பியன் கண்டி அணியுடன் மோதியமை பாராட்டக்குரிய விடயமாகும். இராணுவ அணிக்கு சவாலை கொடுக்கும் அளவிற்கு பல திறமையான வீரர்களை CH & FC அணி கொண்டுள்ளது.
சென்ற வார போட்டியில் 1 புள்ளியால் தோல்வியுற்ற இராணுவ அணி, CR & FC அணிக்கு கடும் சவாலை கொடுத்தது. மேலும், சென்ற வருடம் பலம்மிக்க கடற்படை அணியையும் இராணுவ அணி வென்றமை தமது அணியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு விடயமாகவே உள்ளது.
அவதானத்திற்குறிய வீரர்கள் (CH & FC) – லக்கித் பெரேரா அணியில் அனுபவம் மிக்க விங் நிலை வீரராவார். மேலும் பிளேன்கர் நிலையில் விளையாடும் மொகமட் ரிப்கான் CH & FC அணியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய வீரராவார்.
அவதானத்திற்குறிய வீரர்கள் (இராணுவ அணி) – சுதாரக திக்கும்புற சென்ற வார போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும், சென்ற வருடம் சிறப்பாக விளையாடிய இமன்க ஆரியபால காயம் காரணமாக இவ்வார போட்டியில் இருந்து விலகி உள்ளமை இராணுவ அணிக்கு நட்டம் ஆகும். மொகமட் ரிஸ்வியின் திறமையும் இராணுவ அணிக்கு பலமாகும்.
கடற்படை மற்றும் CR & FC அணிகளுக்கிடையிலான போட்டி
இடம் – வெலிசர
காலம் – 2016.11.13 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் – மாலை 4 மணி
மழையால் பாதிக்கப்பட்ட சென்ற வார போட்டியில் கடற்படை அணியானது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறந்த குழாமை கடற்படை அணி கொண்டுள்ள போதும் போட்டியில் அத்திறமைகளை செயற்படுத்துவதிலேயே அணியின் வெற்றி தங்கியுள்ளது. பயிற்றுவிப்பாளரான மோதிலால் ஜயதிலக்க தமது அணியின் பலம், பலவீனங்களை நன்கு அறிந்தவர்.
CR & FC அணி சென்ற வாரம் தடுமாற்றம் அடைந்தது. இராணுவ அணியுடனான போட்டியில் 1 புள்ளியால் இறுதி நேரத்திலேயே அவ்வணி வெற்றிபெற்றது. சில வீரர்கள் காயம் காரணமாக சென்ற வார போட்டியில் விளையாடாத பொழுதும் CR & FC அணி இருந்த வீரர்கள் மூலம் முடியுமானவரை சிறந்த விளையாட்டைக் காண்பித்தது. பயிற்றுவிப்பாளர் பென் மெக்டகல் இவ்வாரம் தமது அணிக்கு பல மேலதிக பயிற்சிகளை மேற்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவதானத்திற்குறிய வீரர்கள் (கடற்படை அணி) – சத்ய ரணதுங்க பொலிஸ் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். சத்ய மற்றும் நிவங்க பிரசாத் கடற்படை அணியின் முக்கிய வீரர்கள் ஆவர். அதேபோன்று, பலம் மிக்க லீ கீகள் எதிரணிக்கு சவால் கொடுக்கும் மற்றொரு முக்கிய வீரராக உள்ளார்.
அவதானத்திற்குறிய வீரர்கள் (CR & FC அணி) – சென்ற வருடம் கழக மட்ட போட்டிகளில் அறிமுகமான ஒமல்க குணரத்ன தாம் முன்னர் விளையாடிய கழகத்துடன் விளையாடவுள்ளார். சென்ற வாரம் எதிரணி வீரர்களை தன் பலத்தால் தாக்கிய ஒமல்க குணரத்ன. இவ்வாரமும் தனது பலத்தை காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
CR & FC அணி வெற்றி பெற வேண்டும் எனின் ப்ளை ஹாப் வீரர் தரிந்த ரத்வத்த தனது திறமையை சரிவர வெளிப்படுத்த வேண்டும். அண்மையில் இடம்பெற்று முடிந்த அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தரிந்த ரத்வத்த CR & FC அணியின் முக்கிய வீரராவார்.