டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் கடற்படை அணியை வெலிசரை மைதானத்தில் சந்தித்த கண்டி கழகம், போட்டியை 41-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. இதன் மூலம், இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சி இருந்தாலும் கண்டி அணி டயலொக் ரக்பி லீக் சம்பியன் பட்டத்தை தமதாக்கிக்கொண்டது.
இது வரையில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத கண்டி கழகம் , இரண்டாவது இடத்தில இருக்கும் கடற்படை அணியுடன் நேற்று (27) மோதியது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் கண்டி கழகம் இலகுவாக வெற்றிபெற்றது எனலாம்.
ஆரம்பம் முதலே வழமை போல் அசத்திய கண்டி அணியானது, முதல் பாதியில் 5 ட்ரைகளை வைத்து கடற்படை அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தது. கண்டி அணி சார்பாக ஜேசன் திஸாநாயக்க, புவனேக உடன்கமுவ, லவங்க பெரேரா, ரிச்சர்ட் தர்மபால மற்றும் திமித்ரி விஜேதுங்க ஆகியோர் முதலாம் பாதியில் ட்ரை வைத்தனர். நைஜல் ரத்வத்த பெனால்டி மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.
கடற்படை அணி பெனால்டி உதையின் மூலம் முதலாவது 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டாலும், முதல் பாதியில் மேலதிக புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 34 – 03 கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியில் கடற்படை அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது. அவ்வகையில் இரண்டாம் பாதியில் கடற்படை அணியானது இரண்டு ட்ரைகளைப் பெற்றுக்கொண்டது. கடற்படை அணி சார்பாக துளஜந விஜேசிங்க மற்றும் மொகமட் அப்சல் ட்ரை வைத்தனர். எனினும் வெற்றிபெறுவதற்கு இப்புள்ளிகள் கடற்படை அணிக்கு போதுமானதாக அமையவில்லை.
CH & FC அணியின் சவாலை முறியடித்த கண்டி விளையாட்டுக் கழகம்
கண்டி அணி இரண்டாம் பாதியில் சற்று மந்த கதியில் விளையாடியது எனலாம். இரண்டாம் பாதியில் ஒரே ஓரு பெனால்டி ட்ரை மாத்திரமே கண்டி அணி பெற்றுக்கொண்டது. எனினும் முதல் பாதியில் வெளிக்காட்டிய அபாரமான விளையாட்டின் மூலம் போட்டியை தன் பக்கம் கண்டி கழகம் ஈர்த்துக்கொண்டது.
முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 41 (6T, 3C, 1P ) – 17 (2T, 2C, 1P) கடற்படை விளையாட்டுக் கழகம்
ThePapare இன் போட்டியின் சிறந்த வீரர் – பாசில் மரிஜா (கண்டி விளையாட்டுக் கழகம்)
முதல் வெற்றியை பதிவு செய்த பொலிஸ் விளையாட்டுக் கழகம்
பொலிஸ் பார்க் மைதானத்தில் விமானப்படையுடனான போட்டியை 18-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம், பொலிஸ் அணியானது தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்ற வாரம் ஹெவலொக் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் அணியானது, துரதிஷ்டவசமாக போட்டியை வெல்ல முடியாமல் போனதோடு, போட்டி சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இப்போட்டியில் பொலிஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது.
பெனால்டி மூலமாக போட்டியின் முதலாவது புள்ளியை பொலிஸ் அணி பெற்ற பொழுதும், முதலாவது ட்ரையை ருமேஷ் ராமதாஸ் மூலமாக விமானப்படை அணியே பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் அணியானது முதல் பாதியில் இரண்டு ட்ரைகளை வைத்து அசத்தியது. சுரங்க கசுன் முதலாவது ட்ரை வைக்க, கசுன் ராஜகருணா இரண்டாவது ட்ரை வைத்தார்.
முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 15 – 05 விமானப்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியில் முதலாவது ட்ரை வைத்த விமானப்படை போட்டியை விறுவிறுப்பாக்கியது. நுவன் பெரேராவின் இந்த ட்ரையுடன், வெறும் 3 புள்ளியே இரு அணிகளையும் வேறுபடுத்தியமை போட்டிக்கு சுவாரஸ்யத்தை வழங்கியது.
கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அணியானது, சந்தேஷ் ஜயவிக்ரமவின் உதவியுடன் மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளாலும் வேறு எந்த புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பொலிஸ் அணி சுற்றில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம் பொலிஸ் அணி தரவரிசையில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியதோடு, விமானப்படை அணி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 18(2T, 1C, 2P) – 12(2T, 1C) விமானப்படை விளையாட்டுக் கழகம்
ThePapare இன் போட்டியின் சிறந்த வீரர் – சந்தேஷ் ஜயவிக்ரம (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
மாத்திஸ் கிண்ணத்தை CR&FC கழகம் கைப்பற்றியது
ஹெவலொக் பார்க் மைதானத்தில் ஹெவலொக் அணிக்கு எதிராக நடைபெற்ற மாத்திஸ் கிண்ண மற்றும் டயலொக் லீக் போட்டியில், விறுவிறுப்பான 80 நிமிடத்திற்கு பின்னர் போட்டியை 30-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்ட CR&FC அணி 3 வருடத்திற்குப் பின்னர் மாத்திஸ் கிண்ணத்தை சுவீகரித்தது.
கடந்த வாரம் பொலிஸ் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்து அதிர்ச்சி தந்த ஹெவலொக் அணி, இப்போட்டியில் தமது உண்மையான திறமையை நிரூபிக்கும் என எதிர்பார்த்த பொழுதும், இவ்வாரமும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
முதலாம் பாதி முடிவின் பொழுது CR&FC அணியானது 08 -12 என பின்னிலையில் காணப்பட்டாலும், இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி போட்டியை தன் பக்கம் ஈர்த்தது.
ஹெவலொக் அணியை மிரள வைத்த பொலிஸ்
CR&FC அணி மொத்தமாக 4 ட்ரைகளை வைத்ததோடு, 2 பெனால்டிகளையும் சிறந்த முறையில் உதைத்து மொத்தமாக 30 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. மறுமுனையில் ஹெவலொக் அணிக்கு 1 ட்ரை மட்டுமே வைக்க முடிந்தது. எனினும் 5 பெனால்டி வாய்ப்பின் மூலமாக 15 புள்ளிகளை ஹெவலொக் அணி பெற்றுக்கொண்டது.
இந்த தோல்வியின் மூலம் ஹெவலொக் அணியின் இரண்டாம் இடம் கேள்விக்குறி ஆகியுள்ளது
முழு நேரம்: CR&FC 30 (4T, 2C, 2P ) – 22 (1T,1C, 5P) ஹெவலொக் விளையாட்டுக் கழகம்