தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்; தொடர் தோல்விகளால் தடுமாறும் CR & FC

228

டயலொக் ரக்பி லீக் 5 ஆம் வாரத்திற்கான போட்டியில், CR & FC கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற CR & FC மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் கண்டி அணி 24-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இராணுவப்படை மற்றும் ஹெவலொக் அணிகளுக்கிடையிலான மற்றுமொரு போட்டியில், இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தினால் இராணுவப்படை அணியை 29-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹெவலொக் கழகம் வெற்றிகொண்டது.

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

 கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டி  நியமிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது. சென்ற வாரம் CR & FC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இராணுவப்படை அணியானது, இப்போட்டியிலும் வெற்றிகொள்ளும் நோக்குடன் களமிறங்கியது. பிரபல ஹெவலொக் அணியானது கடற்படை அணியுடனான தோல்வியின் பின்னர் இப்போட்டியில் வெற்றிபெறும் நோக்கில் களம் இறங்கியது.

இராணுவ அணியானது போட்டியின் முதலாவது ட்ரை வைத்து ஹெவலொக் அணிக்கு அழுத்தம் கொடுத்தது. சுகத் நாணயக்காராவின் உதவியுடன் சஞ்சய ரத்நாயக்க இராணுவ அணி சார்பாக ட்ரை கோட்டை கடந்தார். சாலிந்த வெற்றிகரமாக கொன்வெர்சனை உதைத்தார். (இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 07 – 00 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

இராணுவ அணி தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, ஹெவலொக் அணி சற்று தடுமாறியது. எனினும் ஹிரந்த பெரேரா ஹெவலொக் அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார். இராணுவ வீரர்களைத் தாண்டி சென்ற பெரேரா ஹெவலொக் அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். ரீசா முபாரக் விளையாடாததன் காரணமாக துலாஜ் பெரேரா கொன்வெர்சனை உதைத்தார். (இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 07 – 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

பொலிஸ், CH & FC அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

டயலொக் ரக்பி லீக் தொடரின் ஐந்தாம் வாரத்திற்கான முதல் போட்டி இன்று…

விட்டுக்கொடுக்காத இராணுவ அணியும், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் விளைவாக ஹெவலொக் அணியின் இடைவெளியின் ஊடே பந்தை எடுத்துச் சென்ற சாலிந்த, 25 மீட்டர்கள் கடந்து பந்தை ஸ்க்ரம் நிலை வீரர் ரிஸ்விக்கு கொடுத்தார். ரிஸ்வி இராணுவ அணி சார்பாக 2 ஆவது ட்ரை வைத்தார். சாலிந்த இம்முறையும் கொன்வெர்சனை தவறவிடவில்லை. (இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 14 – 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

ஹெவலொக் அணியின் தலைவர் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு 10 நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டார். எனினும் ஹெவ்லொக் அணியானது முதல் பாதி முடிவடைய முன்னர் மேலும் இரண்டு ட்ரை வைத்து முன்னிலை பெற்றது. ரமேஷ் பெர்னாண்டோ தனது வேகத்தைப் பயன்படுத்தி கம்பத்தின் அடியில் ட்ரை வைக்க, நிஷோன் பெரேரா இராணுவ வீரர்களை தாண்டி சென்று மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா இரண்டு கொன்வெர்சனையும் சிறப்பாக உதைத்தார்.

முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 14 – 21 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் மழையின் குறுக்கீடு காரணமாக, மைதானத்தில் நீர் நிறைந்த நிலையில் போட்டி சிறிது வேகத்தை இழந்தது. இராணுவ அணி இதனால் சற்று தடுமாறிய பொழுதும், இரண்டாம் பாதியில் முதல் ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தது. சிறப்பான 15 கட்டங்களின் பின் சம்பத் குமார இராணுவ அணி சார்பாக ட்ரை வைத்தார். எனினும் சாலிந்த கொன்வெர்சனை தவறவிட்டார். (இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 19 – 21 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

ஹெவலொக் அணியானது தமக்கு கிடைத்த பெனால்டியைப் பயன்படுத்தி மேலும் 3 புள்ளிகள் பெற்று முன்னிலையை அதிகரித்துக் கொண்டது. துலாஜ் பெரேரா சிறப்பாக கம்பத்தின் நடுவே பந்தை உதைத்தார். (இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 19 – 24 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்) 

CH & FC அணியின் எதிர்தாக்குதலை மீறி மயிரிழையில் வெற்றியீட்டியது ஹெவலொக்

டயலொக் ரக்பி லீக் தொடரின் நான்காம் வாரத்திற்கான போட்டியொன்றில்…

இராணுவ அணி வீரர் சுகத் நாணயக்கார மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சாமர தாபரேவின் ட்ரையுடன் ஹெவலொக் அணியானது வெற்றியை சுவைத்தது. எனினும் துலாஜ் பெரேரா கொன்வெர்சனை தவறவிட்டார்.

இராணுவ அணி பல சந்தர்ப்பங்களில் ட்ரை வைக்க முனைந்த பொழுதும் ஹெவ்லொக் அணி வீரர்கள் சிறப்பாக தடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 19 – 29 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ரமேஷ் பெர்னாண்டோ (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CR & FC

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் 5 ஆம் வாரத்திற்கான இரண்டாவது போட்டியாக, கண்டி மற்றும் CR & FC அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சம்பியனான கண்டி கழகமானது 24-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று தனது தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொண்டது.

கடந்த வாரம் இராணுவ அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், CR & FC அணி இப்போட்டியில் தம்மை பலம் பொருந்திய அணி என்று நிரூபிக்கும் நோக்கத்தில் களம் இறங்கியது. மறுமுனையில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத கண்டி கழகமானது, முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் போட்டிக்கு முகம் கொடுத்தது.

CR & FC அணி ஆரம்பத்தில் புள்ளிகள் பெற பல முயற்சிகள் செய்த பொழுதும் கண்டி வீரர்கள் அதை சிறப்பாகத் தடுத்தனர். எதிர்பார்க்கப்பட்டது போன்றே கண்டி அணியானது போட்டியின் முதலாவது புள்ளியை பெற்றுக்கொண்டது. போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் அனுருத்த வில்வார மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்து அசத்தினார். நைஜல் ரத்வத்தவின் வெற்றிகரமான கொன்வெர்சனுடன் கண்டி அணி 7 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (கண்டி விளையாட்டுக் கழகம் 07 – 00 CR & FC) 

CR & FC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த CH & FC

டயலொக் ரக்பி லீக் தொடரின் மூன்றாம் வாரத்திற்கான போட்டியொன்றில்…

தொடர்ந்து சில நிமிடங்களுக்கு இரண்டு அணிகளாலும் புள்ளிகள் எதையும் பெறமுடியவில்லை. 29 ஆவது நிமிடத்தில், கண்டி அணியின் எல்லைக்குள் பெனால்டி வாய்ப்பொன்றை CR & FC அணி பெற்றுக்கொண்டது. உடனடியாக பெனால்டியை பெற்றுக்கொண்டு ஓடிய கவிந்து கொஸ்தா, CR & FC அணி சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். எனினும் தரிந்த ரத்வத்த கொன்வெர்சனை தவறவிட்டார். (கண்டி விளையாட்டுக் கழகம் 07- 05 CR & FC)

போட்டியின் 37 ஆவது நிமிடத்தில், ஜேசன் திஸாநாயக்க பரிமாற்றம் செய்த பந்தைப் பெற்றுக்கொண்ட தனுஷ்க ரஞ்சன் 40 மீட்டர்கள் ஓடிச் சென்று ட்ரை கோட்டை கடந்தார். நைஜல் ரத்வத்த கொன்வெர்சனைத் தவறவிட்டாலும், கண்டி அணி முன்னிலையுடன் முதல் பாதியை முடித்துக்கொண்டது.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 12 – 05 CR & FC

இரண்டாம் பாதியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டாலும், கண்டி அணி வழமை போலவே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 42 ஆவது நிமிடத்தில் ரோலிங் மோல் மூலமாக புவனேக உடன்கமுவவின் உதவியுடன் கண்டி அணி 3 ஆவது ட்ரை வைத்தது. நைஜல் ரத்வத்த சீரற்ற காலநிலையில் சிறப்பாக கம்பத்தின் நடுவே பந்தை உதைத்து கொன்வெர்சனை பூர்த்தி செய்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 19 – 05 CR & FC)

தொடர்ந்து 60 ஆவது நிமிடத்திலும் மற்றுமொரு ட்ரை வைத்து கண்டி அணி போனஸ் புள்ளியைப் பெற்றுக்கொண்டது. இம்முறை மழையின் உதவியுடன் மைதானத்தில் சறுக்கி சென்ற ரஞ்சன் 4 ஆவது ட்ரை வைத்து அசத்தினார். (கண்டி விளையாட்டுக் கழகம் 24 – 05 CR & FC)

61 ஆவது நிமிடத்தில் கண்டி அணியின் அஷான் டார்லிங் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, CR & FC அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கப்பட்டது. எனினும் CR & FC அணிக்கு, கண்டி அணியை பின்தள்ள அப்புள்ளிகள் போதவில்லை.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 24 – 12 CR & FC

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – புவனேக உடன்கமுவ (கண்டி விளையாட்டுக் கழகம்)