இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டாவின் அனுசரணையில் முதல் முறையாக இடம்பெறும் 23 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு ……
இளம் வீரர்களின் திறமைகளை இனம்காணும் முகமாக முதல் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரானது, முன்னர் இடம்பெற்ற டயலொக் ஜனாதிபதி கிண்ண தங்கக் கிண்ண 22 வயதின்கீழ் பிரிவனருக்கான தொடருக்குப் பதிலாக இடம்பெறுகின்றது.
இத்தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு நேற்று (15) கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள மிஹிலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியபலாபிடிய, அதன் செயலாளர் ஏ.எஸ் நாலக, டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, இலங்கையின் முன்னணி பாடகர்களான பாதியா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஆண்கள், மகளிர் என இரு பாலாருக்குமான இந்தப் போட்டித் தொடர் மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என இரண்டு கட்டங்களாக இடம்பெறும். அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும் போட்டிகளின் நிறைவில் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகும். அதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து 2 ஆண்கள் அணிகளும், 2 மகளிர் அணிகளும் என மொத்தம் 4 அணிகள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்.
Photo Album : Dialog Junior National Volleyball Tournament 2019 – Press Conferences
போட்டித் தொடர் இம்மாதம் 17ஆம் திகதி கொழும்பு விகார மாகாதேவி பூங்காவில் இடம்பெறும் போட்டிகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். சுமார் 3 மாதங்களுக்கு இடம்பெறும் இப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் மஹரகமையில் உள்ள இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் இடம்பெறும்.
நேற்றைய ஊடக சந்திப்பின்போது உரையாற்றிய இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியபலாபிடிய, ”இலங்கை கரப்பந்தாட்டத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் தொடர்ச்சியாக பங்களிப்பு வளங்கி வரும் டயலொக் நிறுவனத்திற்கு நாம் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 23 வயதிக் கீழ் பிரிவு என்பது விளையாட்டின் முக்கிய வயதெல்லையாக உள்ளது. எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர் மிகவும் வெற்றிகரமான தொடராக அமையவும் இதன்மூலம் சர்வதேச அளவில் சாதிக்கக்கூடிய வீரர்கள் உருவாக வேண்டும் என்றும் நான் வாழ்துகின்றேன்” எனத் தெரிவித்தார்.
இம்முறை போட்டித் தொடருக்கு நாடு பூராகவும் இருந்து 1600 இற்கும் அதிகமான அணிகள் பங்கு கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொடரில் பங்கு கொள்ள விரும்புகின்ற அணிகள் இலங்கை கரப்பந்து சம்மேளனத்திற்கு, தமது மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அல்லது இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<