CH & FC அணியின் எதிர்தாக்குதலை மீறி மயிரிழையில் வெற்றியீட்டியது ஹெவலொக்

180

டயலொக் ரக்பி லீக் தொடரின் நான்காம் வாரத்திற்கான போட்டியொன்றில் ஹெவலொக் விளையாட்டுக் கழகம் மற்றும் CH & FC அணிகள் மோதிக் கொண்டன. கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில்  ஹெவலொக் அணி 31-26 என வெற்றி பெற்றது.

CH & FC அணியானது கடந்த போட்டியில் பலமிக்க CR & FC அணிக்கு அதிர்ச்சியளித்திருந்ததுடன், அதே முனைப்புடன் இப்போட்டியிலும் களமிறங்கியது. ஹெவலொக் அணி கடந்த வாரம் பிரபல கடற்படை விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டு தோல்வியை தழுவியிருந்தது. அதன் காரணமாக அவ்வணி இப்போட்டியில் எவ்வாறாயினும் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்துடன் பிரவேசித்திருந்தது.

நித்தவள மைதானத்தில் ட்ரை மழை பொழிந்த கண்டி கழகம்

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் 3ஆம்…

போட்டியின் முதல் பத்து நிமிடங்களின் போது பந்தினை தம் கையிருப்பில் வைத்திருந்த ஹெவலொக் வீரர்கள் எதிரணியின் பாதிக்குள் முகாமிட்டிருந்தனர். அதன் பலனாக அவ்வணிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்ததுடன், இரண்டு உதைகளையும் ரீசா முபாரக் வெற்றிகரமாக உதைத்தார். (ஹெவலொக் 06 – CH & FC 00)

போட்டியின் 24 ஆவது நிமிடத்தில் CH & FC அணியின் நட்சத்திர வீரர் லீ கீகல் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து CH & FC அணியினது தடுப்பாட்டம் நிலைகுலைந்ததுடன், ஹெவலொக் அணி அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்தது.

போட்டியின் முதல் ட்ரையினை நிஷோன் பெர்னாண்டோவின் உதவியுடன் துலாஜ் பெரேரா பெற்றுக் கொண்டார். கடினமான கொன்வெர்சன் உதையை ரீசா தவறவிட்டார். சில நிமிடங்களில் இளம் வீரர் கெவின் டிக்சன் தன் அபார ஓட்டத்தின் மூலம் ட்ரை ஒன்றை வைத்தார். இம்முறை ரீசா முபாரக்கின் உதை குறிதவறவில்லை. (ஹெவலொக் 18 – CH & FC 00)

33ஆவது நிமிடத்தில் ஹெவலொக் விளையாட்டுக் கழகத்தின் ரமேஷ் பெர்னாண்டோவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட CH & FC அணி முதல் முறையாக தமது ட்ரை கோட்டினை நெருங்கியது. சில நகர்வுகளின் பின்னர், பலமிக்க முன்வரிசை வீரர் சசங்க ஆரியரத்ன ட்ரையினை பெற்றுக் கொண்டார். சேமுவல் மதுவந்த கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். (ஹெவலொக் 18 – CH & FC 07)

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 18 – CH & FC 07

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் எதிரணியின் தடுப்பை தகர்த்து முன்னேறிய சித்தும் பீரிஸ் பந்தினை துலாஜ் பெரேராவிற்கு கடத்த, அவர் தனது இரண்டாவது ட்ரையினை வைத்தார். ரீசா இலகுவான உதையை வெற்றிகரமாக உதைக்க புள்ளி வித்தியாசம் மீண்டும் 18 ஆக அதிகரித்தது. (ஹெவலொக் 25 – CH & FC 07)

இந்நிலையில் CH & FC வீரர் புலஸ்தி பண்டாரவிற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், அவ்வணியின் நிலைமை மேலும் மோசமானது. எனினும் சளைக்காது போராடி CH & FC வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை பெற்று அசத்தினர். முன்வரிசை வீரர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் சசங்க ஆரியரத்ன ட்ரைகளை வைத்ததுடன், இரண்டு உதைகளையும் சேமுவல் மதுவந்த சிறப்பாக உதைத்தார். (ஹெவலொக் 25 – CH & FC 21)

தொடர்ந்தும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய CH & FC அணி மற்றுமொரு ட்ரையினை வைத்து முதன் முறையாக போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்டது. சேமுவல் மதுவந்த லாவகமாக பந்தினை கடத்த, சச்சித் சாரங்க இடப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். கடினமான உதையை மதுவந்த தவறவிட்டார். (ஹெவலொக் 25 – CH & FC 26)

போட்டியின் இறுதி பத்து நிமிடங்களில் இரு அணிகளும் சரிசமனாக போராடிய போதிலும், ஹெவலொக் அணி எதிரணியின் பாதிக்குள் நிலைத்திருந்தது. அவ்வணிக்கு இறுதி நிமிடங்களில் இரண்டு பெனால்டி வாய்ய்ப்புகள் கிடைத்ததுடன், முன்னரை போன்றே ரீசா முபாரக் சிறப்பாக உதைத்து தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். (ஹெவலொக் 31 – CH & FC 26)

அதன்படி ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 31 – 26 என மயிரிழையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. CH & FC அணி கடந்த போட்டியை போன்றே இரண்டாம் பாதியில் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தாலும் இறுதிப் 10 நிமிடங்களும் அவர்களுக்கு அதிஷ்டமாக அமையவில்லை.

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 31 – CH & FC 26

ThePapare.com இன் ஆட்டநாயகன் துஷ்மந்த பிரியதர்ஷன (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் துலாஜ் பெரேரா (2 ட்ரை), கெவின் டிக்சன் (1 ட்ரை), ரீசா முபாரக் (4 பெனால்டி, 2 கொன்வெர்சன்)

CH & FCசசங்க ஆரியரத்ன (2 ட்ரை), சச்சித் சாரங்க (1 ட்ரை), யோஷித ராஜபக்ஷ (1 ட்ரை), சேமுவல் மதுவந்த (3 கொன்வெர்சன்)