க்ளிபர்ட் கிண்ண அரையிறுதியில் கண்டி, ஹெவலொக், கடற்படை மற்றும் CR & FC அணிகள்

206

டயலொக் க்ளிபர்ட் (Clifford) கிண்ணத்துக்காக இவ்வாரத்தில் நடைபெற்ற 4 காலிறுதிப் போட்டிகளில் கண்டி, ஹெவலொக், கடற்படை மற்றும் CR & FC அணிகள் வெற்றியை சுவீகரித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

CH & FC எதிர் CR & FC

டயலொக் க்ளிபர்ட் கிண்ண போட்டிகளின் காலிறுதிப் போட்டியில், CH & FC அணியை எதிர்கொண்ட CR & FC அணி 46-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

டயலொக் ரக்பி லீக் போட்டிகளின் இறுதி வாரமான கடந்த வாரத்தில் நேருக்கு நேர் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில், CH & FC அணி வெற்றிபெற்றது. ஆனால் இம்முறை தமது அசாத்திய திறமையை வெளிக்காட்டிய CR & FC அணி, இப்போட்டியில் வெற்றிபெற்று கடந்த வாரம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

போட்டியின் முதல் புள்ளியை CR & FC அணி பெற்றுக்கொண்டதோடு, போட்டியின் முதல் பாதியை CR & FC அணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து 4 ட்ரைகள் வைத்த CR & FC அணி முதல் பாதியில் முன்னிலை அடைந்தது. CH & FC முதல் பாதியில் இரண்டு ட்ரைகளை மட்டுமே வைத்தது.

முதல் பாதி : CR & FC 22 – 15 CH & FC 

இரண்டாம் பாதியிலும் CR & FC அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் பாதியில் மேலும் 3 ட்ரைகளை பெற்றுக்கொண்ட CR & FC அணி போட்டியின் வெற்றியை உறுதி செய்துகொண்டது. இறுதி நேரத்தில் சுதர்ஷன முத்ததந்திரியின் திறமையினால் CH & FC அணி இரண்டு ட்ரைகளை வைத்த பொழுதும், அவை ஆறுதல் புள்ளிகளாகவே அமைந்தன.

கண்டி அணிக்கான மற்றொரு சம்பியன் பட்டத்துடன் விடைபெற்ற பாசில் மரிஜா

CR & FC அணி சார்பாக சாணக சந்திமால் மற்றும் ஜோயல் பெரேரா ஆகியோர் தலா 2 ட்ரைகள் வீதம் வைக்க, கயான் டில்ஷான், கவிந்து பெரேரா, ரீசா ரபாய்தீன் ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர். CH & FC அணி சார்பாக சுதர்ஷன முத்ததந்திரி மற்றும் அனுருத்த ஹேரத் ஆகியோர் தலா இரண்டு ட்ரைகள் வீதம் வைத்தனர்.

முழு நேரம்: CR & FC 46 – 29 CH & FC 

THEPAPARE.COM இன் போட்டியின் சிறந்த வீரர் – ஓமல்க குணரத்ன 


அசைக்க முடியாத கண்டி கழகம் 

டயலொக் லீக் சம்பியனான கண்டி கழகம், பல்லேகலை மைதானத்தில் விமானப்படை அணிக்கு எதிராக நடைபெற்ற க்ளிபர்ட் கிண்ண காலிறுதிப்போட்டியை அதிரடியாக வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பலம் மிக்க கண்டி கழகமானது விமானப்படை அணியை இலகுவாக வெற்றிக்கொள்ளும் என எதிர்பார்த்தது போன்று, 53-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக கண்டி கழகம் வெற்றிபெற்றது. கண்டி அணி சார்பாக புவனேக உடன்கமுவ, அனுருத்த வில்வார மற்றும் ரொஷான் வீரரத்ன ஆகியோர் உபாதை காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் முதலே அதிரடியாக ட்ரை மழை பொழிந்த கண்டி அணி முதல் பாதியில் 4 ட்ரைகளை வைத்து அசத்தியது. பதிலுக்கு விமானப்படை எந்த ஒரு புள்ளியையும் பெற்றுக்கொள்ளவில்லை 

முதல் பாதி : கண்டி விளையாட்டுக் கழகம் 26 – 00 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியையும் சம்பூர்ணமாக ஆதிக்கம் செலுத்திய கண்டி அணி மேலும் 4 ட்ரைகளை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு விமானப்படை அணியால் இரண்டு ட்ரைகளை மாத்திரமே வைக்க முடிந்தது.

கண்டி அணி சார்பாக ஷெஹான் பதிரண மற்றும் ரிச்சர்ட் தர்மபால ஆகியோர் தலா இரண்டு ட்ரைகளை வைக்க யாகூப் அலி, விஸ்வமித்ர ஜெயசிங்ஹ, ஒஷான் பெரேரா, தனுஷ்க ரஞ்சன், திலின விஜேசிங்க ஆகியோர் தலா 1 ட்ரை வைத்தனர்.

விமானப்படை அணி சார்பாக ஜெகான் சீலகம மற்றும் சூர்யா கிரிஷாந்த் தலா 1 ட்ரை வீதம் வைத்தனர்.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 53 – 14 விமானப்படை விளையாட்டுக் கழகம்

THEPAPARE.COM இன் போட்டியின் சிறந்த வீரர் – ஹேஷான் கல்கார 


பொலிஸ் அணியை மூழ்கடித்த கடற்படை 

டயலொக் க்ளிபர்ட் கிண்ணத்துக்கான மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் வெள்ளிக்கிழமை (16) பொலிஸ் அணியை சந்தித்த கடற்படை அணி, 36-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தெரிவாகியது.

இராணுவ அணியையும் வீழ்த்தி வெற்றியோட்டத்தை தொடர்கின்றது கண்டி கழகம்

டயலொக் லீக் போட்டிகளில் 2ஆவது இடத்தை சுவீகரித்த கடற்படை அணி, 7ஆவது இடத்தை சுவீகரித்துக்கொண்ட பொலிஸ் அணியுடன் கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் மோதியது.

முதல் பாதியில் இரண்டு அணிகளும் மாறி மாறி ட்ரை வைக்க, போட்டியின் முன்னிலையை இரண்டு அணிகளும் பரிமாறிக்கொண்டன. எனினும் முதல் பாதி முடிவில் கடற்படை அணி முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளும் முதல் பாதியில் இரண்டு ட்ரைகள் வீதம் வைத்த பொழுதும், கடற்படை அணி மேலதிக 3 புள்ளிகளை பெற்று முதல் பாதியில் முன்னிலை பெற்றது 

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 17 – 14 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ட்ரை வைத்துக்கொண்டன. பொலிஸ் அணி பலம் மிக்க கடற்படை அணிக்கு அதிர்ச்சியளித்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடற்படை அணி தமது வழமையான அசாத்திய விளையாட்டினால் அரையிறுதிக்கு முன்னேறியது.

கடற்படை அணி இரண்டாம் பாதியில் 3 ட்ரைகளை வைக்க, பொலிஸ் அணியினால் 2 ட்ரைகளை மட்டுமே வைக்க முடிந்தது. கடற்படை அணி சார்பாக ஹர்ஷ மதுரங்க, கசுன் டி சில்வா, திலின விஜேசிங்க ஆகியோர் தலா 1 ட்ரை வைக்க, துலாஞ்சன விஜேசிங்க இரண்டு ட்ரைகளை வைத்து அசத்தினார்.

பொலிஸ் அணி சார்பாக வாஜித் பௌமி, கவிந்த ஜயசுந்தர ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர். சுரங்க கசுன் 2 ட்ரைகள் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 36 – 28 பொலிஸ் விளையாட்டுக் கழகம்


ஹெவலொக் அணியும் அரையிறுதி சுற்றினுள் 

இராணுவ அணியை 41-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் டயலொக் க்ளிபர்ட் கிண்ண காலிறுதிப் போட்டியில் வென்றதன் மூலம், ஹெவலொக் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுகொண்டது.

டயலொக் ரக்பி லீக் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த கண்டி கழகம்

பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இராணுவ அணி முதலாவது ட்ரை வைத்து ஆரம்ப சில நிமிடங்களுக்கு ஆதிக்கம் செலுத்தினாலும், ஹெவலொக் அணி தனது திறமையை நிரூபித்து முதல் பாதி முடிவின் போது முன்னிலை வகித்தது. ஹெவலொக் அணி தொடர்ந்து 3 ட்ரைகளை வைக்க, இராணுவ அணியினால் ஒரு ட்ரை மற்றும் ஒரு பெனால்டி மூலமாகவே புள்ளிகளைப்பெற முடிந்தது.

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 19 – 10 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 

இரண்டாம் பாதியில், இராணுவ அணி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியமையால், ஹெவலொக் அணி மேலும் 2 ட்ரைகளை வைத்தது. அத்துடன் ஹெவலொக் அணிக்கு ஒரு பெனால்டி ட்ரையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் இராணுவ அணியினால் இரண்டாம் பாதியில் இரண்டு ட்ரைகளை மட்டுமே வைக்க முடிந்தது. இதனால் இலகுவாக வெற்றிபெற்று ஹெவலொக் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .

ஹெவலொக் அணி சார்பாக பிரசாத் மதுஷங்க, ராண்டி சில்வா, சுதம் சூரியாராச்சி, தினுக் அமரசிங்க, துஷ்மந்த பிரியதர்ஷன ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர் .

இராணுவ அணி சார்பாக ஜனித் லங்கா, மனோஜ் பண்டார மற்றும் சமீர புளத்சிங்கள ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர்.

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 41 – 20 இராணுவப்படை விளையாட்டுக் கழக

THEPAPARE.COM இன் போட்டியின் சிறந்த வீரர் – ஷெஹான் டயஸ்