டயலொக் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இவ்வாரப் போட்டிகளில் இலங்கை கடற்படை, நியூ யங்ஸ், நீர்கொழும்பு இளைஞர் அணி, இலங்கை இராணுவம் மற்றும் சோண்டர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன .

இலங்கை கடற்படை மற்றும் திகாரிய இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி

ஜூலை 17ஆம் திகதி வெளிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடற்படை அணியானது 1-0 என்றகோல்கள் வித்தியாசத்தில் திகாரிய இளைஞர் அணியைத் தோற்கடித்தது. போட்டியின் முதற் பாதியில் கடற்படை அணி சார்பாக நிர்மல் விஜேதுங்க 24ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் இரு அணிகளாலும் எந்த ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை.


சூப்பர் சன் மற்றும் நியூ யங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

சூப்பர் சன் மற்றும் நியூ யங்ஸ் அணிகளுக்கியடையலான போட்டி, மும்முறமான ஆட்டத்தின் பின் நியூ யங்ஸ் அணிக்கு சார்பாக நிறைவுபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் கோலை நியூ யங்ஸ் அணியே அடித்தது. எனினும் அது ஒரு சாதாரண கோல் போல் அன்றி சூப்பர் சன் அணியின் வீரர் தினேஷ் அபேரத்ன அடித்த சுயகோல் (own goal ) மூலமாகவே நியூ யங்ஸ் அணி முதல் கோலைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத சூப்பர் சன் அணியும் ஜோசப் மூலமாக முதற் பாதியின் மேலதிக நேரமான 47ஆவது (45+2) நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. இரண்டாம் பாதியில் மீண்டும் நியூ யங்ஸ் அணி ஹசித ப்ரியங்கர மூலமாக 61ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலைபெற்றது. இதற்க்குப் பதிலடியாக 77ஆவது நிமிடத்தில் மீண்டும் ஜோசப் கோல் அடிக்க போட்டி மீண்டும் சமநிலையடைந்தது. போட்டி சமநிலையில் இருக்கும் வேளையில் மேலதிக நேரமான 96ஆவது (90+6) நிமிடத்தில் மொஹமட் முஷிகான் வெற்றி கோலை அடித்து நியூ யங்ஸ் அணிக்கு ஒரு சிறப்பான வெற்றியைத் தேடி தந்தார்.


மக்கள் பாதுகாப்புப் படை மற்றும் நீர்கொழும்பு இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி

ஜூலை 16ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நீர்கொழும்பு இளைஞர் அணியானது இலகுவாக ஒரு அபார வெற்றியைப்பெற்றது. மக்கள் பாதுகாப்புப் படைக்குக் கருணை காட்டாத நீர்கொழும்பு இளைஞர் அணியினர் 7-0 என்று பாரிய கோல் வித்தியாசத்தினால் வெற்றிபெற்றனர்.

நீர்கொழும்பு இளைஞர் அணி சார்பாக எஸ்சுன் அக்கூடே 12,31 மற்றும் 35ஆவது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அப்துல் முமுனி 13 ஆவது நிமிடத்திலும், ப்ரியங்கர சில்வா 57ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து தமது பங்களிப்பை வழங்கினர். போட்டியின் இறுதிக் கட்டமான 84ஆவது மற்றும் 86ஆவது நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்த சுரங்க நீர்கொழும்பு இளைஞர் அணியின் முன்னிலையை மேலும் அதிகரித்தார்.


மாத்தறை அணி மற்றும் சொலிட் அணிகளுக்கிடையிலான போட்டி

மாத்தறை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே திலின பண்டார 13ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். சொலிட்  அணி 10 வீரர்களுடன் விளையாடியதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாத்தறை அணியானது ப்ரின்ஸ் அசமோ மூலமாக 15ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலைபெற்றது. 18ஆவது நிமிடத்தில் மாத்தறை அணியின் வீரப்புலியும் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட இரு அணிகளும் 10 வீரர்களுடன் மோதிக்கொண்டனர்.

தமது முதல் கோலுக்காக போராடிய சொலிட் அணி 55ஆவது நிமிடத்தில் அபூமர் மூலமாக கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. இரு அணிகளாலும் வேறு கோல்களை அடிக்க முடியாததால் போட்டி 1-1 என்று சமநிலையில் முடிந்தது.


இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டி

ஜூலை 17 ஆம் திகதி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி 1-1 என்று சமநிலையில் முடிந்தது. இரு அணிகளாலும் ஆரம்பத்தில் கோல் எதையும் அடிக்க முடியவில்லை. கடுமையான ஆட்டத்திற்குப் பின் 43ஆவது நிமிடத்தில் டில்ஷான் பெர்னாண்டோ விமானப்படை அணிக்காக முதலாவது கோல் அடித்து முதற் பாதியில் விமானப்படை முன்னிலை அடைய உதவினார். இரண்டாம் பாதியில் 57ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்காக சம்பத் பதிரன கோல் அடித்து போட்டியை  சமநிலை செய்தார். இரு அணிகளாலும் வேறு கோல்களை அடிக்க முடியாததால் போட்டி 1-1 என்று சமநிலையில் முடிந்தது.


அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டி

மலையகத்தில் ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மலையக அணியான அப் கண்ட்ரி லயன்ஸ், இலங்கை இராணுவத்துடன் மோதி 2-0 என்று தோல்வியைக் கண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இராணுவ அணியானது மதுஷான் டி சில்வா மூலமாக 28ஆவது மற்றும் 61ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து போட்டியை வெற்றிகொண்டது.


சோண்டர்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கிடையிலான போட்டி

களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சோண்டர்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. எனினும் போட்டியின் முதலாவது கோலை ஜாவா லேன் அணி நவீன் ஜுட் மூலமாக 7ஆவது நிமிடத்தில் அடித்து சோண்டர்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. எனினும் நிதானமாக ஆடிய சோண்டர்ஸ் அணியானது சஜித் தர்மபால மூலமாக 27ஆவது, 42ஆவது நிமிடங்களில் 2 கோல் அடித்து முன்னிலையைப்பெற்றது.

முன்னிலையை அதிகரிக்கும் நோக்குடன் 45ஆவது நிமிடத்தில் சுந்தராஜ் நிரேஷ் கோல் அடிக்க, முதற் பாதி 3-1 என்று சோண்டர்ஸ் அணி சார்பாக முடிவடைந்தது. தொடர்ந்து தமது திறமையை வெளிக்காட்டிய சோண்டர்ஸ் அணியானது 50ஆவது நிமிடத்தில் மொகமட் மூலமாக இன்னொரு கோலும் அடித்து 4-1 என்று தனது வெற்றியை உறுதிப்படுத்தியது. 63ஆவது நிமிடத்தில் நவீன் ஜுட் ஒரு கோல் அடித்து ஜாவா லேன் அணிக்கு உதவிய பொழுதும், ஜாவா லேன் அணியால் மேலதிக கோல் எதனையும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 4-2 என்று சோண்டர்ஸ் அணி வெற்றியீட்டியது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்