டயலொக் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இவ்வாராம் நடைபெற்ற போட்டிகளில் இராணுவ அணி, விமானப்படை அணி, சோண்டர்ஸ் அணி, ப்ளூ ஸ்டார் அணி, ரினொன் மற்றும் சொலிட் அணிகள் வெற்றிபெற்றன.

மாத்தறை கழகம் மற்றும் இராணுவ அணிக்களுக்கிடையிளான போட்டி

மாத்தறை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை இராணுவ அணியானது 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்றவாரம் நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இராணுவ அணியானது இவ்வாரமும் தனது வெற்றி ஓட்டத்தைத் தொடர்ந்தது. முன்னைய போட்டியில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்த மொஹமட் இஸடீன் தனது திறமை நிரந்தரமானது என்று ஒப்புவிக்கும் வகையில் இப்போட்டியிலும் 10, 22, 64 ஆவது நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசத்தினார்.

இஸடீன் 10ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததற்குப் பதிலடியாக மாத்தறை அணியின் ஒச்சுக்கோ பிராங்க் 17ஆவது நிமிடத்தில் கோல் அடித்த பொழுதும் அதன்பிறகு கோல் அடிக்க மாத்தறை அணியினர் தவறினர். மேற்கூறியது போல இஸடீன் மேலும் இரண்டு கோல் அடிக்க இராணுவ அணி 3-1 என்று வெற்றிபெற்றது.


இலங்கை விமானப்படை மற்றும் திஹாரிய இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி

திறமைமிக்க விமானப்படை அணியானது திஹாரிய இளைஞர் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் இலகுவாக வெற்றியீட்டியது.

ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விமானப்படை அணியானது முதல் 5ஆவது நிமிடத்தில் கவிந்து இஷான் மூலமாக தனது முதலாவது கோலைப் பதிவு செய்தது. அவரைத் தொடர்ந்து துமிந்த 20ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, முதற்பாதி முடிவடைய 4 நிமிடங்கள் இருக்கும் நிலையில் விமானப்படை அணிக்காக நிபுண பண்டார இன்னொரு கோல் அடிக்க முதற்பாதி இடைவேளையின் போது 3-0 என்று விமானப்படை முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் திஹாரிய இளைஞர் அணி சிறப்பாக விளையாடியமையால் விமானப்படை அணியால் மேலதிக கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் விமானப்படை அணியானது 3-0 என்று வெற்றிபெற்றது. இப்போட்டியில் திஹாரிய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.


சோண்டர்ஸ் மற்றும் சூப்பர் சன் அணிகளுக்கிடையிலான போட்டி

களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஆரம்பத்திலேயே தனது திறமையை வெளிக்காட்டிய சோண்டர்ஸ் அணி 7ஆவது நிமிடத்தில் கிரிஷாந்த அபேசேகர மூலம் கோல் அடித்து போட்டியில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாட முதற்பாதியில் வழங்கப்படும் மேலதிக நேரத்தில் (45+1) தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிடாமல் சஜித் தர்மபால சசோண்டர்ஸ் அணிக்காக கோல் அடித்து 2-0 என்று முன்னிலையை அதிகப்படுத்தினார். யாரும் எதிர்பாராமல் அடுத்த ஒரு நிமிடத்திலேயே (45+2) சூப்பர் சன் அணிக்கும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. முதல் கோலை அடிப்பதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிடாத சபிராஸ் கைஸ் கோல் அடித்து 2-1 என்று கோல் வித்தியாசத்தைக் குறைத்தார்.

இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய சூப்பர் சன் அணி, நுவான் ப்ரியங்கர மூலமாக 63ஆவது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்த ஆட்டம் சூடு கண்டது. எனினும் 70ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணிக்காக அப்டெல் மொஹமட் கோல் அடிக்க மீண்டும் சோண்டர்ஸ் அணி முன்னிலை வகித்தது. இறுதி ஆட்ட நேர முடிவின் போது 3-2 என்ற கோல் கணக்கில் சோண்டர்ஸ் அணி வெற்றிபெற்றது.


நீர்கொழும்பு இளைஞர் அணி மற்றும் ப்ளூ ஸ்டார் அணிகளுக்கிடையிலான போட்டி

ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய நீர்கொழும்பு இளைஞர் அணியினர் தமது முதல் கோலை நுவான் ப்ரியங்கர மூலமாக 26ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டனர். முதற் பாதியின் இறுதி நிமிடமாமன 45ஆவது நிமிடத்தில் நீர்கொழும்பு இளைஞர் அணியானது ப்ளூ ஸ்டார் அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்றை அளிக்க வாய்ப்பைத் தவறவிடாத இடோவு ஹமீட் கோல் அடித்து போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

இரண்டாம் பாதியில் ஆரம்பத்திலேயே நுவான் ப்ரியங்கர 49ஆவது நிமிடத்தில் கோல் அடித்து நீர்கொழும்பு இளைஞர் அணியை மீண்டும் ஒரு முறை முன்னிலைப்படுத்தினார். எனினும் 78ஆவது நிமிடத்தில் ஜிபோலா  ப்ளூ ஸ்டார் அணிக்காக கோல் அடித்து போட்டியை  மீண்டும் சமநிலைப்படுத்தினார். 81ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை ப்ளூ ஸ்டார் அணிக்கு வழங்கிய நீர்கொழும்பு அணியானது தமது வெற்றிக்கனவை இழந்தது. தனது இரண்டாவது பெனால்டி வாய்ப்பை தவறவிடாத இடோவு ஹமீட் கோல் அடித்து ப்ளூ ஸ்டார் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியடையச் செய்தார்.


இலங்கை கடற்படை மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கிடையிலான போட்டி

இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதும் இரு அணிகளாலும் முதல் பாதியில் கோல் எதுவும் போட முடியவில்லை. 50ஆவது நிமிடத்தில் சதுரங்க சஞ்சீவ கடற்படை அணிக்காக கோல் அடித்து கடற்படை அணியை முன்னிலை அடையச்செய்தார். பதிலுக்கு ஒரு கோல் அடிக்க ஜாவா லேன் அணி கடுமையாக முயற்சி செய்தது. வெற்றிபெற சில நிமிடங்களே இருக்கும் நிலையில் கடற்படை அணியின் எதிர்பார்ப்புகளை உடைத்தெறியும் விதமாக 88ஆவது நிமிடத்தில் ஜனக சமிந்த ஜாவா லேன் அணிக்காக கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். போட்டி 1-1 என்று சமநிலையில் முடிந்தது.


நியூ யங் மற்றும் ரினொன் அணிகளுக்கிடையிலான போட்டி

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நியூ யங் அணியானது ரினொன் அணியுடன் 3-0 என்று அதிர்ச்சி தோல்வி  அடைந்தது. அல்பர்ட் எப் பீரிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரினொன் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. தமது அணிக்காக ஜொப் மைக்கல் 22 மற்றும் 60 ஆவது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலதிகமாக மொஹமட் ரிப்நாஸ் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரினொன் அணி 3-0 என வெற்றிபெற்றது .


சொலிட் மற்றும் கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் சொலிட் அணியானது மலையகத்தின் கிரிஸ்டல் பெலஸ் அணியை இலகுவாக வெற்றியீட்டியது. தக்சில டனோஜ் விஜேதுங்க 36ஆவது, 74ஆவது மற்றும் 83ஆவது நிமிடங்களில் சொலிட் அணிக்காக கோல் அடித்து அசத்தினார். தக்சில டனோஜ் விஜேதுங்கவின் உதவியுடன் சொலிட் அணி கிரிஸ்டல் பெலஸ் அணியை 3-0 என்று இலகுவாக தோற்கடித்தது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்