டயலொக் சாம்பியன்ஸ் லீக் சூப்பர் 8 சுற்று ஆரம்பம்

505
super 8

இலங்கையின் முன்னணி கால்பந்தாட்டப் போட்டித் தொடரான டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் சூப்பர் 8 சுற்று இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த சுற்றில், தெரிவு செய்யப்பட்டுள்ள 8 அணிகளும் ஏனைய அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களையும் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும். 

சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டியாக இலங்கை ராணுவப்படை அணிக்கும் இலங்கை விமானப்படை அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி (சனிக்கிழமை) கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதே தினம் இரவு ஏழு மணிக்கு ரினோன் மற்றும் ப்ளூ ஸ்டார் கழக அணிகளுக்கு இடையிலான போட்டி அதே மைதானத்தில் இடம்பெறும். 

முதலாவது சுற்று நிறைவடைந்த நிலையில் குழு A இல் இராணுவ கழக அணி முதலாவது இடத்தையும், சொலிட் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தையும், கொழும்பு விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்த நிலையில் 4ஆவது இடத்தைத்  தீர்மானிக்கும் போட்டியில் நீர்கொழும்பு இளைஞர் அணியைப் பின் தள்ளி ப்ளூ ஸ்டார் அணி 4ஆவது இடத்தையும் பிடித்து கொண்டது.

குழு B இல் ரினோன் விளையாட்டுக் கழகம் முதலாவது இடத்தையும், நியூ யங்ஸ் கழகம் இரண்டாவது இடத்தையும், கடற்படைக் கழகம் மூன்றாவது இடத்தையும், விமானப்படை நான்காவது இடத்தையும் பிடித்துக் கொண்டது.

இந்த சூப்பர் 8 சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட அணிகள் மூலம் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமது நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தருவதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு. அனுராத டி சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் ”இப்போட்டித் தொடரின் வெற்றிக்கு வீரர்களின் உற்சாகமும், ஆற்றலுமே காரணம் எனவும் அனைத்து வீரர்களும் தமது திறமையை சிறப்பாக வெளிக்காட்ட வேண்டும் என  தெரிவித்ததோடு கிண்ணத்தை வெல்லப்போகும் அணிக்கு தனது வாழ்த்தையும்” தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னணி அனுசரணையாளரான டயலொக், இக் கால்பந்தாட்ட தொடருக்கு தொடர்ந்து 11 வருடமாக அனுசரணை வழங்கி வருவதாக டயலொக் அக்சியாடா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடகப் பிரிவு பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக தெரிவித்தார்.மேலும் இத்தகைய போட்டிக்கு அனுசரணை வழங்குவதில் நாம் பெருமை அடைகிறோம் எனவும் கால்பந்தாட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்து செல்வதற்கு தாம் பங்களிப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்ற 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ரினோன் மற்றும் இராணுவ அணிகளின் கடுமையான போட்டியின் பின் கொழும்பு விளையாட்டு கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.