நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் எதிர்வரும் நத்தார் பண்டிகை என்பவற்றினைக் கருத்தில் கொண்டு டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அடுத்த ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தகவல்களின்படி, குறித்த சுற்றுப் போட்டிகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி U.L.ஜஸ்வர் ThePapare.com இற்கு பிரத்தியேகமாகக் கருத்து தெரிவிக்கையில்,
”எமக்கு சுப்பர் 8 சுற்றின் 2ஆம் வாரப் போட்டிகளை தற்பொழுது நடாத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் நத்தார் பண்டிகையை எதிர்கொள்ளவுள்ளமையினால் எமக்கு இந்த காலப்பகுதியில் போட்டிகளை நடாத்த முடியாமல் உள்ளது. இதன் காரணமாகவே, நாம் ஜனவரி 2ஆம் அல்லது 3ஆம் வாரத்திற்கு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளோம்” என்றார்.
மேலும், நாம் (FFSL) இந்த விடயம் குறித்தும், மீண்டும் போட்டிகளை நடத்தும் திகதி குறித்தும் தீர்மானிப்பதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக அடுத்த வாரமளவில் நாம் குறித்த கழக அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளோம்” என்றும் ஜஸ்வர் மேலும் குறிப்பிட்டார்.
டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதல் வாரப் போட்டிகள் கடந்த செப்டம்பர் மாத முதல் வாரத்தில் இடம்பெற்றன. அதன் பின்னர், கம்போடியாவுடனான நட்பு ரீதியான போட்டி மற்றும் ஒற்றுமைக் கிண்ணத் தொடர் என்பவற்றில் இலங்கை தேசிய கால்பந்து அணி பங்குகொண்டிருந்தது.
இலங்கை தேசிய அணியில் சுப்பர் 8 சுற்றில் விளையாடும் கழகங்களின் வீரர்களே அதிகமாக உள்ளடங்கி இருந்தனர். எனவே தமது கழக வீரர்கள் தேசிய அணியில் இடம்பெறுவதனால், இலங்கை தேசிய அணியின் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததன் பின்னரே சுப்பர் 8 சுற்றை நடாத்த வேண்டும் என்று கழகங்கள் வேண்டுகோள் விடுத்தன.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் திகதி வரை டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகளை ஒத்தி வைப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது. எனினும் அண்மைய நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் போட்டிகள் நவம்பர் 19ஆம் திகதியும் இடம்பெறாமல் பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தகது.