டயலொக் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் வார இறுதிப் போட்டிகள் ஜூலை 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. இவ்வாரத்தில் நடைபெற்ற போட்டிகளில் ரினோன் கழகம், கொழும்பு கழகம், விமானப் படை, கிரிஸ்டல் பெலஸ், சோண்டர்ஸ் கழகம் ஆகியன வெற்றிபெற்றன.
ஜாவா லேன் மற்றும் நியூ யங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி
ஜூலை 30ஆம் திகதி கொழும்பு சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
போட்டியின் முதல் கோலை நியூ யங்ஸ் அணி சார்பாக மொஹமட் மூஷிகன் 27ஆவது நிமிடத்தில் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய பொழுதும் மேலதிக கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில் 1-0 என்று நியூ யங்ஸ் சார்பாக முடிந்தது.
இரண்டாவது பாதியும் தீவிரமாக நடைபெற ஜாவா லேன் அணி கோல் அடிக்க முடியாமல் போராடி வந்தது .நியூ யங்ஸ் அணி வெற்றி பெறும் என அனைவராலும் எதிர்பார்த்த பொழுது 81ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் ஜாவா லேன் சார்பாக கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார்.
ரினொன் மற்றும் பொலிஸ் கழகங்களுக்கிடையிலான போட்டி
ஜூலை 30ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரினொன் அணி 6-2 என்று அபார வெற்றியீட்டியது.
முதல் பாதியில் மந்தமாக விளையாடிய ரினொன் கழகம் 1கோலை மட்டுமே அடித்தது. முதற் பாதியின் மேலதிக நேரமான 45+1ஆவது நிமிடத்தில் மொஹமட் பஸால் கோல் அடித்தார். எனவே முதற் பாதி 1-0 என்று முடிவுக்கு வந்தது.
1-0 என்று இரண்டாம் பாதியை ஆரம்பித்த ரினொன் கழகத்தின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. இரண்டாம் பாதியில் 51ஆவது நிமிடத்தில் ஜோப் மைக்கல் ரினொன் அணி சார்பாக கோல் அடித்தார். தொடர்ந்து பொலிஸ் அணியின் கெல்வின் கணுவும் 23ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணி சார்பாக கோல் அடிக்க 2-1 என்று ரினொன் கழகம் முன்னிலை வகித்தது.
அதன் பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரினொன் அணியின் ஜொப் மைக்கல் 60,80,87ஆவது நிமிடங்களில் கோல் அடித்து, மொத்தமாக 4 கோல்கள் அடித்து ரினொன் அணியின் அபார வெற்றிக்குக் கைகொடுத்தார்.
மேலும் ரினோன் அணி சார்பாக 68ஆவது நிமிடத்தில் பஸுல் ரஹ்மான் கோல் அடித்து அணியை பலப்படுத்தினார். பொலிஸ் அணி நிலந்த புதிரான மூலம் 85ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இப்போட்டியின் இரண்டாம் பாதியில் மொத்தமாக 7 கோல்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கழகம் மற்றும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி
ஜூலை 31ஆம் திகதி கொழும்பு சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகமானது 1-0 என்று ரீதியில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
மும்முரமாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக போராடின. எனினும் முதலாவது கோலை கொழும்பு கால்பந்தாட்டக் கழகமானது மேலதிக நேரமான 45+2ஆவது நிமிடத்தில் துவான் ரிஸ்னி மூலம் பெற்றுக்கொண்டது. முதலாவது பாதி 1-0 என்று நிறைவடைந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்த போதிலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. போட்டியை 1-0 என்று கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் வெற்றிபெற்றது.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டி
இலங்கையின் இரு பாதுகாப்பு அணிகளுக்கிடையிலான இப்போட்டி ஆகஸ்ட் 31 ஆம் திகதி வெளிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை விமானப்படை அணியானது 4-1 என்று இலகுவாக வெற்றியீட்டியது.
போட்டியை விமானப்படை வென்றபொழுதும் போட்டியின் முதலாவது கோலை 4ஆவது நிமிடத்தில் கிரிஷாந்த பெரேரா மூலம் கடற்படை அணி பெற்றுக்கொண்டது. எனினும் கடற்படை அணியால் மேலதிக கோல்கள் எதையும் அடிக்க முடியவில்லை. விமானப்படை சார்பாக நிபுண பண்டார 8ஆவது நிமிடத்திலும், கவிந்து இஷான் 62ஆவது நிமிடத்திலும், கலும் பெரேரா 79ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மேலும் சமீர கிரிஷாந்த விமானப்படை சார்பாக 23ஆவது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார்.
கிரிஸ்டல் பெலஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அணிகளுக்கிடையிலான போட்டி
ஜூலை 30ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிவில் பாதுகாப்புப் படையானது இப்போட்டியிலும் 5-2 என்று தோல்வி அடைந்தது.
போட்டியில் தோல்வியுற்ற பொழுதும் முதல் கோலை வீரமந்த்ரி 4ஆவது நிமிடத்திலும், இரண்டாவது கோலை 58ஆவது நிமிடத்திலும் சிவில் பாதுகாப்பு கழகத்திற்குப் பெற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் அதிரடியாக விளையாடிய கிரிஸ்டல் பெலஸ் அணி வீரர்களான ஷமில் ஹில்மி, ஜான் பிரான்கொயிஸ், கிறிஸ்டோபர் எரஸ்டஸ் ஆகியோர் முறையே 6,8,13ஆவது நிமிடங்களில் கிரிஸ்டல் பெலஸ் அணி சார்பாக கோல் அடித்தனர்.
84 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிடாத ஐசக் அபா மேலும் ஒரு கோல் அடித்தார். கிரிஸ்டல் பெலஸ் அணி சார்பாக குமார ஓன் கோல் அடித்து உதவினார்.
போட்டியை 5-2 என்று கிரிஸ்டல் பெலஸ் இலகுவாக வெற்றிகொண்டது.
திகாரிய இளைஞர் கழகம் மற்றும் சோண்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி
ஜூலை 31ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. சென்ற வாரம் கடும் தோல்வியை சந்தித்த திகாரிய அணியானது இவ்வாரமும் 4-0 என்று சோண்டர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த சோண்டர்ஸ் கழகமானது திஹாரிய இளைஞர் அணியை இலகுவாக வெற்றிகொண்டது. சோண்டர்ஸ் அணி சார்பாக சுந்தராஜ் நிரேஷ் 42 மற்றும் 47 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.மேலும் ட்ரொரே மொஹமட் 56 ஆவது நிமிடத்திலும் அப்தெல் மொஹமட் 74 ஆவது நிமிடத்திலும் சோண்டர்ஸ் அணி சார்பாக கோல் அடித்து சோண்டர்ஸ் அணிக்கு ஒரு இலகுவான வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்