டயலொக் சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வாரத்தின் நடுவே நடைபெறும் போட்டிகள் இவ்வாரம் 3ஆம் திகதி நடைபெற்றது.
இப்போட்டிகளில் சூப்பர் சன் மற்றும் நீர்கொழும்பு இளைஞர் அணிகள் வெற்றிபெற்றதோடு, இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தன.
சொலிட் மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டி
அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.
குழு A வில் 1ஆவது இடத்தில காணப்படும் இராணுவ அணியானது அனைத்து போட்டிகளிலும் வெற்றியுற்ற நிலையில் இப்போட்டியில் கலந்துகொண்டது. எனவே இராணுவ அணி வெற்றி பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சிறப்பாக விளையாடிய சொலிட் அணி இராணுவ அணிக்கு சவாலாக விளையாடி போட்டியை சமநிலையில் முடித்தது.
சொலிட் அணி குழு A வில் 3ஆம் இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சன் மற்றும் திஹாரிய இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி
களுத்துறை வெர்னோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நேரத்தில் இரண்டு கோல்களை அடித்து சூப்பர் சன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் திஹாரிய இளைஞர் அணியை தோல்வியுறச் செய்தது.
போட்டியின் முதல் 30 நிமிடங்களில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய பொழுதும் இரு அணிகளாலும் கோல் எதனையும் அடிக்க முடியவில்லை.
எனினும் சூப்பர் சன் அணிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் சூப்பர் சன் அணி அவற்றைத் தவறவிட்டது.
35ஆவது நிமிடத்தில் ஜோசப் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சூப்பர் சன் அணி சார்பாக முதல் கோலை அடித்தார்.
இதன் மூலம் சூப்பர் சன் அணி முதல் பாதி முடிவின் பொழுது 1-0 என்று முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் சூப்பர் சன் அணி அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும் இரு அணிகளும் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.
79ஆவது நிமிடத்தில் சிறப்பாக செயற்பட்ட பாரூட் பாயிஸ் சிறப்பாகப் பந்தை நகர்த்தி சூப்பர் சன் அணி சார்பாக கோல் அடித்தார்.
84ஆவது நிமிடத்தில் சூப்பர் சன் அணியின் சில்மி ஹசனுக்கும், திஹாரிய அணியின் சுதர்ஷன ராமநாயக்காவிற்கும் இடையில் நடைபெற்ற முறுகளினால் இரு அணி வீரர்களுக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேலதிக நேரமான 90+2 நிமிடத்தில் மொஹமட் பர்ஹான் மேலும் ஒரு கோல் அடித்து சூப்பர் சன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற உதவினார்.
நீர்கொழும்பு இளைஞர் அணி மற்றும் மாத்தறை அணிகளுக்கிடையிலான போட்டி
களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நீர்கொழும்பு இளைஞர் அணி 4-2 என்று வெற்றிபெற்றது.
அடுத்த சுற்றுக்குத் தெரிவாக வேண்டுமானால் இதில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் விளையாடிய மாத்தறை அணிக்கு எதிராக ஆட்டம் ஆரம்பித்து 2ஆவது நிமிடத்திலேயே மதுஷங்க பீரிஸ் கோல் அடித்து நீர்கொழும்பு அணியை முன்னிலை அடையச் செய்தார்.
மாத்தறை அணி தமது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறிது நேரம் சென்றாலும் 14ஆவது நிமிடத்தில் பிரின்ஸ் அசமோஹா மூலமாக கோல் அடித்து 1-1 என்று புள்ளியை சமநிலை செய்தது.
இந்த கோல் கொடுத்த நம்பிக்கையின் மூலமாக சிறப்பாக விளையாடிய மாத்தறை அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பொழுதும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டு கோல் அடிக்கத் தவறியது
இரண்டாம் பாதியில் 55ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்ட உதையை சிறப்பாக செயல்படுத்திய ஆரோன் மாத்தறை அணிக்காக கோல் அடித்து மாத்தறை அணியை முன்னிலைப்படுத்தினார்.
விட்டுக்கொடுக்காத நீர்கொழும்பு இளைஞர் அணியினரும் 62ஆவது நிமிடத்தில் ப்ரியங்கர சில்வா மூலம் கோல் அடித்து புள்ளியை சமநிலை செய்தனர்.
தொடர்ந்து 82ஆவது நிமிடத்திலும் நீர்கொழும்பு அணி சார்பாக அக்கூடே கோல் அடித்து நீர்கொழும்பு அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.
தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்ட மாத்தறை அணியானது போட்டியை சமநிலை செய்ய இருந்த அருமையான வாய்ப்பைத் தவறவிட்டது.
மேலதிக நேரமான 90+4 நிமிடத்தில் அப்துல் மூமினி நீர்கொழும்பு சார்பாக கோல் அடிக்க நீர்கொழும்பு இளைஞர் அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் ப்ளூ ஸ்டார் அணிகளுக்கிடையிலான போட்டி
நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி 2-2 என்ற நிலையில் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது.
இரு அணிகளும் முதல் 10 நிமிடங்களில் எந்த ஒரு வாய்ப்பையும் பெறாத பொழுது 12ஆவது நிமிடத்தில் தமக்குக் கிடைத்த தண்ட உதையின் மூலம் கோல் அடித்து அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை முன்னிலை அடையச் செய்தார் சார்ள்ஸ் ஓர்லு.
ப்ளூ ஸ்டார் அணி பல முயற்சியை மேற்கொண்ட பொழுதும் கோல் கீப்பர் மொஹமட் லுப்த்தி அவற்றையெல்லாம் சிறப்பான முறையில் தடுத்தார்.
இரண்டாம் பாதியில் 52ஆவது நிமிடத்திலேயே ப்ளூ ஸ்டார் அணியால் கோல் அடிக்க முடிந்தது. தண்ட உதையின் மூலம் மொஹமட் பர்ஸீன் ப்ளூ ஸ்டார் அணி சார்பாக கோல் அடித்து புள்ளியை சமநிலை செய்தார்.
73ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர் அந்தனி அனாயோ கோல் அடித்து அணியைப் பலப்படுத்தினார். எனினும் 83ஆவது நிமிடத்தில் கிடைத்த கோர்னர் உதையின் மூலம் நசிரு ஒபயமி ப்ளூ ஸ்டார் அணி சார்பாக கோல் அடித்து போட்டியை சமநிலையில் முடித்தார்.