தொடரும் இராணுவ அணியின் வெற்றி ஓட்டம்: குழு மட்டப் போட்டிகள் முடிவு

343

டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் இவ்வாரம் நடைபெற்ற போட்டிகளில் மாத்தறை கழகம், பொலிஸ், ரினொவுன் கழகம், இராணுவ அணி மற்றும் ப்ளூ ஸ்டார் அணிகள் வெற்றிபெற்றன.

சிவில் பாதுகாப்பு அணி மற்றும் மாத்தறை அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 9ஆம் திகதி சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாத்தறை அணியானது சிவில் பாதுகாப்பு அணியை 2-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிவில் பாதுகாப்பு அணிக்கு இப்போட்டியிலும் தோல்வியுற்ற பொழுதும் குறைந்த கோல் அடிப்படையில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மாத்தறை அணியானது பல வாய்ப்புகளை தவறவிட்டதால் 38ஆவது நிமிடத்திலேயே ஒச்சுக்கோ பிராங்க் மூலமாக முதலாவது கோல் அடித்தது. இரண்டாவது கோல் அடிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட மாத்தறை அணி 89ஆவது நிமிடத்திலேயே நிர்விந்தவினால் கோல் அடித்தது.

45ஆவது நிமிடத்தில் மாத்தறை அணி வீரர் திலந்த சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட மாத்தறை அணி 10 வீரர்களுடனேயே மிகுதி நேரத்தை விளையாடியது. இப்போட்டியிலும் தோல்வியுற்ற சிவில் பாதுகாப்பு அணி இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியையும் வெற்றிகொள்ளாமலே போட்டியை விட்டு வெளியேறியது.

சூப்பர் சன் மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 10ஆம் திகதி களுத்துறை வெர்னோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பொலிஸ் அணி 1-0 என்று சூப்பர் சன் அணியை வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட நிலையில் முதலாம் பாதி கோல் எதுவும் அடிக்காத நிலையில் சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய பொழுதும் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அணியின் மொஹமட் சுபைக் தமது அணி சார்பாக வெற்றி கோலை அடித்து அசத்தினார். சூப்பர் சான் அணி கோல் எதுவும் அடிக்காத நிலையில் பொலிஸ் அணி போட்டியை வென்றது.

ரினோவுன் மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 13ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரினோவுன் அணி 1-0 என்று வெற்றிபெற்றது.

குழு B இல் முதலிடத்தில் காணப்படும் ரினோவுன் அணியானது 4ஆவது இடத்தில இருக்கும் விமானப்படை அணியுடன் மோதியது. கடந்த போட்டியில் ரினோவுன் அணி தோல்வியுற்ற பொழுதும் இரண்டாவது போட்டியில் வெற்றியைப்பெற்றுக் கொண்டது. சிறப்பான இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சிறப்பாக மோதிக்கொண்டன.

இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. ரினோவுன் அணியின் கோல் மன்னன் ஜொப் மைக்கல் 62ஆவது நிமிடத்தில் தமது அணிக்காக வெற்றி கோலை அடித்தார். இந்த வருடத்தில் ஒரு போட்டியில் மட்டும் தோல்வியுற்று தமது திறமையை நிரூபித்தது ரினோவுன் கழகம்.

சொண்டர்ஸ் மற்றும் கடற்படை அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 14ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு  அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

அடுத்த சுற்றுக்குத் தெரிவாகப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் சொண்டர்ஸ் அணியும் போட்டியை  சமநிலை செய்தால் போதும் என்ற நிலையில் கடற்படை அணியும் களமிறங்கின. இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே வாய்ப்புகளைத் தவற விட முதற் பாதி கோல் எதுவும் அடிக்காத நிலையில் சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் 52ஆவது நிமிடத்தில் ட்றாவோர் மொஹமட் மூலம் சொண்டர்ஸ் அணி முதலாவது கோல் அடித்தது. பதிலுக்கு அடுத்த 6ஆவது நிமிடத்திலேயே கடற்படை அணியின் நாலக ரொஷான் கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தார். இறுதி நிமிடங்களில் இரு அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்தும் இரு அணிகளும் தவறவிட்ட நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது.

கொழும்பு மற்றும் இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 13ஆம் திகதி சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நிமிட கோலின் மூலம் 2-0 என்று இராணுவ அணி வெற்றிபெற்றது.

எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாது குழு மட்டத்திலான இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இராணுவ அணியானது இப்போட்டியிலும் தோல்வியுறாது அதிக புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில் இடம்பெற்ற இப்போட்டியில் இராணுவ அணி தமது நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த நிலையில் புது முக வீரர்களுடன் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய இராணுவ அணியானது 15ஆவது நிமிடத்தில் சஜித் குமார மூலமாகவும், 90+1 நிமிடத்தில் திவங்க சந்திரசேகர மூலமாகவும் இரு கோல்கள் அடித்து போட்டியை 2-0 என்று வெற்றிபெற்றது.

ப்ளூ ஸ்டார் மற்றும் சொலிட் அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் 14ஆம் திகதி களுத்துறை வெர்னோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகியது.

அடுத்த சுற்றுக்குத் தெரிவாக வேண்டுமெனின் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் போட்டியில் கலந்து கொண்ட ப்ளூ ஸ்டார் அணி இது வரை இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத சொலிட் அணியை தோற்கடித்து சூப்பர் 8 சுற்றில் தமது இடத்தைப் பதிவு செய்தது.

ப்ளூ ஸ்டார் அணி சார்பாக 29ஆவது நிமிடத்தில் இதோவு ஹமீட் முதலாவது கோலை அடித்தார். இரண்டாவது கோல் அடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்ட ப்ளூ ஸ்டார் அணியானது மொஹமட் இர்ஷான் மூலமாக 82ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது.