ஆரம்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளர்களாக மாறியிருக்கும் டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata) நிறுவனம், அதன் மூலம் LPL தொடரின் அனுசரணையாளர்களில் ஒருவராகவும் மாறியிருக்கின்றது.
மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் டயலொக் ஆசியாட்டா, ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களாக கடந்த 10 வருடங்களுக்கு மேல் இருப்பதோடு, தற்போது பல்நாட்டு வீரர்கள் விளையாடும், LPL தொடரிற்கும் அனுசரணை வழங்கி இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சிக்கு தமது பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் LPL தொடரின் உத்தியோகபூர்வ பாடல் வெளியீட்டு விழாவிற்கும் டயலொக் நிறுவனம் தமது அனுசரணையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. “எக்வ ஜயகமு” (ஒன்றாய் வெல்வோம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலினை, “பாத்தியா சந்துஷ்”, யொஹானி, உமாரியா, ஆர்யன் தினேஷ் கணகரத்தினம் (ADK), சங்க மற்றும் சஜித ஆகியோர் பாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
LPL தொடரின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“எமது நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதே நமது முதன்மை நோக்கமாகும். அதற்கமைய நடைபெறவுள்ள LPL போட்டிகளும் நமது இளம்வீரர்களை இனம்காண்பதுடன் அவர்களை மெருகேற்றுவதற்கும் தகுந்த களமாக்கிக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது எனலாம் .
இப்போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதுடன் (பாடல்) வெளியீட்டு நிகழ்வை நடத்துவதற்கும் அனுசரணை வழங்குகின்ற டயலொக் ஆசியாட்டா நிறுவனத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை கொண்டு சேர்க்கும் சிறந்த உயர் தரத்திலான போட்டிகளை கொண்டதான போட்டித் தொடராக இப்போட்டிகள் அமையும் என எதிர்பார்க்கின்றேன்.”
மறுமுனையில் LPL தொடருக்கு அனுசரணை வழங்கிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான சுபுன் வீரசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.
“தெற்காசிய பிராந்தியத்தில் துடிப்பானதும் வரவேற்பும் மதிப்புமிக்கதான போட்டித்தொடராக இருக்கும் LPL போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக முன்னோக்கிச் செல்வதையிட்டு டயலொக் மகிழ்ச்சியடைகின்றது.”
“கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களாக செயற்பட்டு இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு டயலொக் தீவிர பங்களிப்பை வழங்கி வருன்றது. மேலும், LPL போன்ற போட்டியானது இலங்கையின் தேசிய அணிக்கான எதிர்கால சம்பியன்களை அடையாளம் காணவும் தெரிவு செய்வதற்குமான சிறந்த களமாக அமையும்.”
2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதோடு, தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கின்றது.
இந்த LPL தொடரில் இம்முறை ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ளை ஜயன்ட்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் என இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த இந்த தொடரின் முதல் பருவகாலத்திற்கான போட்டிகளில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<