பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றதோடு, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
>> முதல் டெஸ்டில் அபார வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி
சில்லேட்டில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை அதன் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தமது அபார துடுப்பாட்டங்களின் வாயிலாக உறுதி செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து அதன் தலைவரான தனன்ஞய டி சில்வா கருத்து வெளியிட்டிருக்கின்றார். தனன்ஞய டி சில்வா முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியதோடு, அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய மற்றுமொரு துடுப்பாட்டவீரரான கமிந்து மெண்டிஸையும் பாராட்டியிருந்தார்.
“என்னை மிகவும் சந்தோசப்படுத்திய விடயமாக கமிந்து மெண்டிஸின் மீள்வருகை அமைந்திருந்தது. தேசிய அணியின் கதவுகளை நீண்ட காலமாக தட்டியிருந்த அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை மிகவும் சிறப்பாக உபயோகம் செய்திருக்கின்றார்.”
கமிந்து மெண்டிஸ் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் கடந்த 2022 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கை டெஸ்ட் அணியில் 7ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரருக்கு கமிந்து மெண்டிஸ் பொருத்தமானவராக இருப்பார் எனவும் தனன்ஞய டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார்.
“நான் முன்னதாக ஏழாம் இலக்க வீரராக துடுப்பாடியிருக்கின்றேன். எனினும் இது (7ஆவது இடம்) கமிந்துவிற்கு பொருத்தமாக உள்ளது. அவர் பொருத்தமான நுட்பங்கள், திறமைகள் மற்றும் சதூர்யமாக செயற்படக் கூடிய தன்மை என அனைத்தையும் ஒருமித்து கொண்டிருக்கின்றார். எனவே நாம் அவரை அணிக்குள் இணைத்ததன் மூலம் தவறு ஒன்றை செய்திருக்கவில்லை.” என்றார்.
அதேவேளை முன்வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரமவிற்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் பேசியிருந்த தனன்ஞய டி சில்வா, பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சிறப்பாக செயற்படாததே அவருக்கு ஓய்வு வழங்கப்பட்ட பிரதான காரணம் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் அனைத்து விக்கெட்டுக்களையும் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகவே கைப்பற்றியிருந்தது. இதற்காக தனன்ஞய டி சில்வா தமது அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இம்மாதம் 30ஆம் திகதி சட்டோக்ரமில் ஆரம்பமாகுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<