இங்கிலாந்தில் உபாதைக்குள்ளாகியுள்ள தனன்ஜய லக்‌ஷான்

Sri Lanka tour of England 2021

251

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் தனன்ஜய லக்‌ஷான் திடீர் உபாதைக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

இதனால் இலங்கை அணி வீரர்களுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி இங்கிலாந்தை சென்றடைந்த இலங்கை அணி வீரர்கள், மென்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரெபர்ட் மைதானத்தில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் கடைபிடித்து வந்தனர். 

இதனையடுத்து நேற்றுமுன்தினம் முதல் தமது பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை அணி வீரர்கள், இன்றைய தினம் தமது முதலாவது பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றனனர்.

இலங்கை அணி வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் குசல் பெரேரா தலைமையிலான அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான அணியும் விளையாடி வருகின்றன.

இதனிடையே கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற களத்தடுப்பு பயிற்சியின் போது சகலதுறை வீரர் தனன்ஜய லக்‌ஷானின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இன்று (16) மற்றும் நாளை மறுநாள் (18) நடைபெறவுள்ள பயிற்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாது எனவும், தற்போது அவர் காயத்தில் குணமடைவதற்கான மேலதிக சிகிச்சைகளை பெற்றுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் தனன்ஜய லக்‌ஷான் இடம்பெற்றிருந்த போதிலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறுதி நேரத்தில் அந்தத் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<