தேசிய அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை

1343

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் டி சில்வா (62 வயது) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

எந்த வகையிலான சவால்களையும் எதிர்கொள்ள தயராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச்..

இரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயத்திற்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு 08.30 மணியளவில் கே. ரஞ்சன் டி சில்வா தனது வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்களால் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மூன்று பேர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  

எனினும், கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் உடம்பில் 12 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், இதற்காக டி-56 ரக துடுப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்..

இதேநேரம், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்றும், இதுதொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, இன்று (25) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளது. எனினும், தந்தையின் திடீர் உயிரிழப்பை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த தனஞ்சய டி சில்வா குறித்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தனஞ்சய டி சில்வா, குறித்த தொடரில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பெற்றார். அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதற்கும் அவர் முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதனையடுத்து கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சதம் குவித்து இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்ட தனஞ்சய டி சில்வா, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமொன்றை பெற்றுக்கொண்டு இலங்கை டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் இந்த திடீர் மரணத்தை கேள்வியுற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடனடியாக நேற்று இரவு வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததுடன், பெரும்பாலான வீரர்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தனர்.

அதேபோல இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையத்தளமான ThePapre.com உம் தனஞ்சய டி சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<