இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இடையே ஒழுங்கு செய்த பயிற்சி ஒருநாள் போட்டியில் தனன்ஞய டி சில்வா தலைமையிலான அணி, தசுன் ஷானக்க தலைமையிலான அணியினை வீழ்த்திருக்கின்றது.
தென்னாபிரிக்க – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த கிரிக்கெட் தொடர்களுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக தசுன் ஷானக்க தலைமையிலான பதினொருவர் அணிக்கும், தனன்ஞய டி சில்வா தலைமையிலான பதினொருவர் அணிக்கும் இடையில் ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (29) ஆரம்பமாகியது.
>> இலங்கையின் புதிய உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பு
மழையின் குறுக்கீடு காணப்பட்ட இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தனன்ஞய டி சில்வா தலைமையிலான அணியினர், 28.1 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தனன்ஞய டி சில்வா அணியின் சார்பிலான துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்க 59 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில், லஹிரு மதுசங்க வெறும் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக தசுன் ஷானக்க தலைமையிலான பதினொருவர் அணிக்கு 30 ஓவர்களில் 165 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தசுன் ஷானக்க தலைமையிலான அணி 27 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்கள் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் ஆட்டத்தில் மீண்டும் மழையின் குறுக்கீடு உருவானது. இதனால், போட்டி இடைநிறுத்தப்பட்டு போட்டியின் வெற்றியாளர்களாக டக்வெத் லூயிஸ் முறையில் தனன்ஞய டி சில்வாவின் அணியினர் அறிவிக்கப்பட்டனர்.
தசுன் ஷானக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஷேன் பண்டார 40 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்ய, லஹிரு மதுசங்க 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தனன்ஞயவின் அணியில் லஹிரு குமார 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
தனன்ஞய டி சில்வா XI – 147/6 (28.1) வனிந்து ஹஸரங்க 68*, மினோத் பானுக்க 21, லஹிரு மதுசங்க 3/09, அகில தனன்ஞய 2/46
தசுன் ஷானக்க XI – 128/9 (27) அஷேன் பண்டார 40, லஹிரு மதுசங்க 36, லஹிரு குமார 4/12, புலின தரங்க 2/24
முடிவு – தனன்ஞய டி சில்வா XI அணி டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<