புதிய டெஸ்ட் தரவரிசையில் இலங்கையின் மூன்று வீரர்கள் முன்னேற்றம்

236

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை – பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (15) நிறைவுக்கு வந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையானது புதிய டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலை இன்று (16) வெளியிட்டுள்ளது. 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மார்னஸ் லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (786) 3 நிலைகள் உயர்ந்து முதல் முறையாக முதல் ஐந்து இடங்களுக்குள் புகுந்துள்ளார். 

மேலும் இலங்கையுடனான டெஸ்ட்டில் இறுதி நாள் ஆட்டத்தில் சதமடித்த பாகிஸ்தானின் பாபர் அஸாம் 4 நிலைகள் உயர்ந்து அதிகூடிய டெஸ்ட் தரவரிசை புள்ளிகளுடன் (728) முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியிலிருந்து சதமடித்த தனஞ்சய டி சில்வா 8 நிலைகள் உயர்ந்து 573 தரவரிசை புள்ளிகளுடன் 35 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். 

மேலும் குறித்த டெஸ்ட் போட்டிகள் நிறைவில் ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து), அஞ்செலோ மெத்திவ்ஸ் (இலங்கை) 1 நிலை உயர்ந்து 23 ஆவது நிலை, ட்ரெவிஸ் ஹெட் (ஆஸி.), கொலின் டி க்ரெண்ட்ஹோம் (நியூசிலாந்து), ஜோ பேர்ன்ஸ் (ஆஸி.) ஆகிய வீரர்கள் தரவரிசையில் உயர்ந்த நிலைகளுக்கு முன்னேறியுள்ளனர். 

இதேவேளை இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்று முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்த ஆபித் அலி அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்று டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் தற்போது 78 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். மேலும் ஆபித் அலி தனது கன்னி ஒருநாள் போட்டியிலும் சதமடித்து, கன்னி டெஸ்ட் மற்றும் கன்னி ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையும் படைத்துள்ளார். 

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியல் (முதல் 10 இடங்கள்) 

  1. விராட் கோஹ்லி (இந்தியா) – 928 தரவரிசை புள்ளிகள்
  2. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 911 தரவரிசை புள்ளிகள்
  3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 864 தரவரிசை புள்ளிகள்
  4. சடீஸ்வர் புஜாரா (இந்தியா) – 791 தரவரிசை புள்ளிகள்
  5. மார்னஸ் லபுஷேன் (அவுஸ்திரேலியா) – 786 தரவரிசை புள்ளிகள்
  6. அஜிங்கியா ரஹானே (இந்தியா) – 759 தரவரிசை புள்ளிகள்
  7. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா) – 755 தரவரிசை புள்ளிகள்
  8. ஜோ ரூட் (இங்கிலாந்து) – 752 தரவரிசை புள்ளிகள்
  9. பாபர் அஸாம் (பாகிஸ்தான்) – 728 தரவரிசை புள்ளிகள்
  10. திமுத் கருணாரத்ன (இலங்கை) – 725 தரவரிசை புள்ளிகள்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

வேகப்பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கச்செய்து ஒரு டெஸ்ட்டில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை பதம் பார்த்த அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது முறையாக முதல் ஐந்து இடங்களுக்குள் புகுந்துள்ளார். அவர் 806 புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகூடிய டெஸ்ட் தரவரிசை புள்ளிகளுடன் 9 நிலைகள் உயர்ந்து ஐந்தாமிடத்தை பிடித்துள்ளார். 

அவுஸ்திரேலிய அணியின் 7 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்தின் நைல் வேக்னர் 1 நிலை உயர்ந்து வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (834) முதல் முறையாக பட்டியலில் மூன்றாமிடத்தை தக்க வைத்துள்ளார். மேலும் ஜொஸ் ஹெஸில்வூட் 1 நிலை உயர்ந்து ஏழாமிடத்திற்கு உயர்ந்துள்ளார். 

ஒரு ஐந்து விக்கெட்டுடன் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி மற்றுமொரு தடவை முதல் பத்து இடங்களுக்குள் புகுந்துள்ளார். 3 நிலைகள் உயர்ந்த அவர் 780 தரவரிசை புள்ளிகளுடன் பத்தாமிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுடனான டெஸ்டில் ஒரு விக்கெட் வீழ்த்திய இலங்கையின் லஹிரு குமார 2 நிலைகள் உயர்ந்து 437 தரவரிசை புள்ளிகளுடன் 36 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேலும் நைதன் லயன் (அவுஸ்திரேலியா), சஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகள் 362, மார்னஸ் லபுஷேன் (அவுஸ்திரேலியா), நஸீம் ஷாஹ் (பாகிஸ்தான்) வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகள் 60, ஆகியோர் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியல் (முதல் 10 இடங்கள்) 

  1. பெட் கம்மிண்ஸ் (அவுஸ்திரேலியா) – 898 தரவரிசை புள்ளிகள்
  2. ககிஸோ ரபாடா (தென்னாபிரிக்கா) – 839 தரவரிசை புள்ளிகள்
  3. நைல் வேக்னர் (நியூசிலாந்து) – 834 தரவரிசை புள்ளிகள்
  4. ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்) – 830 தரவரிசை புள்ளிகள்
  5. மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) – 806 தரவரிசை புள்ளிகள்
  6. ஜஸ்பிரிட் பும்றா (இந்தியா) – 794 தரவரிசை புள்ளிகள்
  7. ஜொஸ் ஹெஸில்வூட் (அவுஸ்திரேலியா) – 785 தரவரிசை புள்ளிகள்
  8. வேர்னன் பிளான்டர் (தென்னாபிரிக்கா) – 783 தரவரிசை புள்ளிகள்
  9. ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) – 782 தரவரிசை புள்ளிகள்
  10. டிம் சௌத்தி (நியூசிலாந்து) 780 தரவரிசை புள்ளிகள்

இதேவேளை நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மாத்திரமல்லாது துடுப்பாட்டத்திலும் மொத்தமாக 53 ஓட்டங்களை குவித்த மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 1 நிலை முன்னேறி 312 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<