இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தனஞ்சய டி சில்வா, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியுடன் இணைய இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடன் இந்த மாதம் 06 ஆம் திகதி போர்ட் ஒப் ஸ்பெயின் நகரில் ஆரம்பமாகும் போட்டியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.
தேசிய அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை
இலங்கை கிரிக்கெட் அணியின்…
இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகியிருந்தது. எனினும், இந்த இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்ட வீரர்களில் ஒருவரான தனஞ்சய டி சில்வாவுக்கு அவரது தந்தையின் திடீர் மரண சம்பவத்தினால் குறித்த திகதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியிருந்தது.
தனஞ்சயவின் தந்தையான ரஞ்சன் டி சில்வா, கடந்த மாதம் 24 ஆம் திகதி இரவு இனம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த துயர சம்பவத்தில் இருந்து தனஞ்சய டி சில்வா மீள இலங்கை கிரிக்கெட் சபை போதுமான கால அவகாசத்தினையும், போதுமான அளவு ஆதரவுகளையும் வழங்கியிருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில், தனஞ்சய மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று இலங்கை குழாத்துடன் இணைவதை ThePapare.com இற்கு உறுதிப்படுத்திய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான கிரேம் லெப்ரோய், அவர் அங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார்.
“அவர் இன்று இலங்கையில் இருந்து (மேற்கிந்திய தீவுகளுக்கு) புறப்படுகின்றார். மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முகாமைத்துவக் குழு அவர் (தனஞ்சய) ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முழுத்தகுதியுடன் இருக்கின்றாரா என்பதை தீர்மானிக்கும். “
குசல் பெரேராவின் இரண்டாவது அரைச்சதத்துடன் முடிவடைந்த பயிற்சிப் போட்டி
cஇலங்கை கிரிக்கெட் அணிக்கும்…
இரண்டு வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலிய அணியுடனான தொடர் மூலம் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார். இலங்கையில் நடைபெற்றிருந்த குறித்த தொடரில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக தனஞ்சய மாறியிருந்த போதிலும் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயற்படவில்லை. இதனால் அவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.
பின்னர், உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியமைக்காக கடந்த ஆண்டு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட தனஞ்சய, இந்தியாவுடனான தொடரிலும் இலங்கை அணி இறுதியாக விளையாடிய பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் சதங்கள் விளாசி சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனஞ்சய, பங்களாதேஷ் அணியுடனான தொடரின் போது, இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகுறைந்த இன்னிங்சுகளில் (23) ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்கிற சாதனையினை முன்னாள் துடுப்பாட்ட வீரர் றோய் டயஸ் உடன் சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி அவரிடம் இருந்து இதே மாதிரியான ஆட்டத்தினை எதிர்பார்க்கின்றது.
பத்து வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளில் இதுவரையில் டெஸ்ட் தொடர் எதனையும் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<