லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணியின் 29 வயதான அறிமுக வீரர் டெவோன் கொன்வே இரட்டைச் சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் உப தலைவரானார் ஸ்டுவர்ட் பிரோட்
இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் அனுபவ வீரர்களான டாம் லதாம் (23), கேன் வில்லியம்சன் (13) ரொஸ் டெய்லர் (14) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், இந்தப் போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியில் அறிமுகமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டெவோன் கொன்வே தனது முதல் போட்டியிலேயே நங்கூரமாக நிலைத்து நின்று இங்கிலாந்தின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டார்.
தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொன்வே, 347 பந்துகள் எதிர்கொண்டு அதில் 22 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் இரட்டைச் சதம் அடித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களைக் குவித்தது.
இதனிடையே, தனது முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய டெவோன் கொன்வே பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
போட்டியின் முதல் நாளில் சதம் அடித்ததன் மூலம் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்த கொன்வே, 131 ஓட்டகளைக் கடந்த போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டு சாதனையொன்றையும் முறியடித்தார்.
வயதானாலும் கிரிக்கெட்டுக்கு GoodBye சொல்லாத நட்சத்திரங்கள்
கடந்த 1996ஆம் ஆண்டு இதே லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகிய சவுரவ் கங்குலி, தனது முதல் போட்டியிலேயே 131 ஓட்டங்களைக் குவித்தது, லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியது. தற்போது அந்த சாதனையை டெவோன் கொன்வே முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இதுதவிர, டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது (இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல்) வீரர் என்ற பெருமையையும் கொன்வே பெற்றுக்கொண்டார்.
அதேபோல, கொன்வே 154 ஓட்டங்களைக் கடந்த போது, இங்கிலாந்து மண்ணில் அறிமுகப் போட்டியிலேயே அதிகமான ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து வீரர்களான ரஞ்சித்சின்ஜி மற்றும் கிரேஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
1896ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரஞ்சித்சின்ஜி அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களைக் குவித்திருந்ததே அதிகபட்ச ஓட்டங்களாக இதுவரை காலமும் இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை 125 ஆண்டுகளுக்குப் பிறகு டெவோன் கொன்வே முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அறிமுகமாகும் புதிய விதிகள்
இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய ஆறாவது வீரராக இடம்பிடித்த கொன்வே. நியூசிலாந்து அணி சார்பில் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்தின் மெத்யூ சின்கிளைர் தனது அறிமுக டெஸ்டில் 214 ஓட்டங்களை (1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக) எடுத்திருந்தார்.
அத்தோடு, இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அதுமாத்திரமின்றி, அறிமுக டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இடதுகை துடுப்பாட்ட வீரராகவும் அவர் இடம்பிடித்தார். முதலிரெண்டு இடங்களில் ருடால்ப் (222, தென்னாபிரிக்கா), கைல் மேயர்ஸ் (210 மேற்கிந்திய தீவுகள்) உள்ளனர்.
Video – ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுக்கள் எடுத்த பந்துவீச்சாளர் யார்?
அத்துடன், அறிமுக டெஸ்டில் அதிக ஓட்டங்களைக் எடுத்த 6ஆவது வீரராகவும் இடம்பிடித்தார். இதில் டிப் போஸ்டர் (287, இங்கிலாந்து), ஜெக்குவஸ் ருடால்ப் (222, தென்னாபிரிக்கா), லோரன்ஸ் ரொவே (214, மேற்கிந்திய தீவுகள்), மெத்யூ சின்கிளைர் (214, நியூசிலாந்து), பிரெண்டன் குருப்பு (201, இலங்கை) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
எனவே, தனது முதல் போட்டியிலேயே இரட்டைச் சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள டெவோன் கொன்வேவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…